Skip to main content

விசுவாசமாக இருந்தவர்..! - முன்னாள் அமைச்சர் மறைவுக்கு OPS-EPS இரங்கல்

Published on 19/04/2021 | Edited on 19/04/2021

 

ddd

 

முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான அ.பாப்பாசுந்தரம் மறைவுக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள வளையப்பட்டியைச் சேர்ந்தவர் அ.பாப்பாசுந்தரம் (86). உடல்நலக் குறைவு காரணமாக திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்தநிலையில், நேற்று (18.04.2021) அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். 

 

எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கியபோது கட்சியில் இணைந்தார். அப்போது குளித்தலை ஒன்றியச் செயலாளராக இருந்தார். எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா அணி, ஜானகி அணி என இரண்டாக செயல்பட்டபோது ஜெயலலிதா அணியில், 1989இல் சேவல் சின்னத்தில் குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 

 

அதனைத் தொடர்ந்து 1991, 2001, 2011 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்று நான்கு முறை எம்.எல்.ஏ.வாக பணியாற்றினார். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்தார். மாவட்டச் செயலாளர், மாவட்ட அவைத்தலைவர் என கட்சியிலும் பதவி வகித்தார். 

 

மாநில அமைப்புச் செயலாளராக பதவி வகித்து வந்த பாப்பாசுந்தரம், வயது முதிர்வால், திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலமானார். மறைந்த பாப்பாசுந்தரத்திற்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.

 

பாப்பாசுந்தரம் மறைவுக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

 

அதில், “பாப்பாசுந்தரம் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும் மிகுந்த மனவேதனையும் அடைந்தோம். ஆரம்பகால கழக உடன்பிறப்பு பாப்பாசுந்தரம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், இதயதெய்வம் ஜெயலலிதா ஆகியோர் மீதும், தொடர்ந்து தலைமையின் மீதும் விசுவாசம் கொண்டு கரூர் மாவட்ட கழக அவைத்தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி உள்ளதோடு, ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியில் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

 

பாப்பாசுந்தரத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் இந்த துயரத்தை தாங்கிக்கொள்ளக் கூடிய சக்தியையும் தைரியத்தையும் அளிக்க வேண்டும்  என்றும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்” என கூறியுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்