Skip to main content

‘நாளுக்கு நாள் எல்லை மீறிக் கொண்டே போகிறது’ - திமுக கூட்டணிக் கட்சிகள் ஆளுநருக்கு கண்டனம்

Published on 29/06/2023 | Edited on 29/06/2023

 

'Day by day the border is being crossed'-DMK alliance parties condemn the Governor

 

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். தொடர்ந்து அவர் வகித்து வந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை உள்ளிட்ட இலாகாக்கள் மற்ற இரு அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.

 

இந்நிலையில் செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம், வேலைக்கு பணம் பெற்றதாக வழக்குகள் உள்ளன என்பதை சுட்டிக்காட்டி செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்குவதாக தமிழக ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், 'தற்போது அமலாக்கத்துறை வழக்கில் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் உள்ளார். செந்தில் பாலாஜி இனியும் அமைச்சராக நீடித்தால் விசாரணை பாதிக்கப்படும் என்பதால் அவர் நீக்கப்பட்டுள்ளார். அவர் மீது உள்ள கிரிமினல் வழக்கு தொடர்பாக நீதிமன்ற காவலில் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

'Day by day the border is being crossed'-DMK alliance parties condemn the Governor

 

இதற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவின் டி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஆளுநர் ஆர்.என்.ரவி செய்திருப்பது அரசியல் ரீதியான முடிவு. தொடர்ந்து ஆளுநர் அரசியல் சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார். ஆர்.எஸ்.எஸ் தொண்டர் போல ஆளுநர் செயல்படுகிறார். ஒரு அமைச்சரை நீக்கவோ சேர்க்கவோ முதலமைச்சரால் மட்டும் தான் முடியும். தற்போது ஒரு அமைச்சரை நீக்கியுள்ள ஆளுநரால் ஒருவரை அமைச்சராக சேர்க்க முடியுமா? ஆளுநர் தனது செயலுக்காக நீதிமன்றத்தில் குட்டுப்படுவார்” எனத் தெரிவித்துள்ளார். அதேபோல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 'அமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது. ஆளுநர் அறிவிப்பை நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்வோம்' எனத் தெரிவித்துள்ளார்.

 

nn

 

இந்நிலையில் இதற்கு திமுக கூட்டணிக் கட்சிகளும் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. செந்தில் பாலாஜி நீக்கப்பட்டது சட்டவிரோதம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். “நீதிமன்ற காவலில் இருப்பதால் அமைச்சர் பதவியை பறிக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியை ஆளுநர் நீக்கியது சட்டவிரோதம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு விரோதமாக ஆளுநர் செயல்படுகிறார்” என வைகோ தெரிவித்துள்ளார். அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், “மாநில அரசுடன் மோதலை உருவாக்குகிறார் தமிழக ஆளுநர். சர்வாதிகாரி போல தமிழக ஆளுநர் செயல்படுகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

 

விசிக தலைவர் திருமாவளவன், “அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்கிய ஆளுநரின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது. சங்பரிவாரின் விருப்பங்களை நிறைவேற்றி வருகிறார் ஆளுநர். ஆளுநரின் இந்த தான்தோன்றித்தனத்தை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். “மோடி அரசாங்கமே ஆளுநரை ஏவி இது போன்ற செயல்களில் ஈடுபட வைக்கிறது” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். “பாஜக அரசால் அனுப்பப்பட்டுள்ள முகவராக ஆளுநரின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் எல்லை மீறிக்கொண்டே போய்க் கொண்டிருக்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியை ஆளுநர் நீக்கி உள்ளது சர்வாதிகாரத்தின் உச்சம்” என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்