Skip to main content

"கொலை மிரட்டல் விடுகின்றனர்" - முன்னாள் அமைச்சரின் பரபரப்பு குற்றச்சாட்டு

Published on 13/02/2022 | Edited on 13/02/2022

 

cv shanmugam press meet at guindy about tamilnadu election

 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் தேர்தல் தொகுதிகள் அனைத்திலும் வேகமெடுத்துள்ளது. இந்நிலையில், திமுகவின் ஏஜெண்டாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார். 

 

கிண்டி ஆளுநர் மாளிகையில் நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்த முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், சிவி சண்முகம், பெஞ்சமின் ஆகியோர் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில், தேர்தல் நடைபெறும் இடங்களில் காவல்துறையின் உதவியுடன் திமுக பணப்பட்டுவாடா செய்வதாக அதிமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பை முடித்துக்கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், "மாநில தேர்தல் ஆணையம் விருப்பு வெறுப்பு இல்லாமல், ஜனநாயகத் தன்மையோடு செயல்பட வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையம் முழுக்க முழுக்க திமுகவின் கைப்பாவையாகச் செயல்படுகிறது. திமுகவின் அராஜகத்திற்குத் துணை போகிறது. திமுகவின் மாநில தேர்தல் பிரிவு செயலாளர் போல மாநில தேர்தல் அதிகாரிகள் செயல்படுகிறார்கள் மாநில தேர்தல் ஆணையம் திமுகவின் அங்கமாகச் செயல்படுகிறது.

 

திமுகவிற்கு ஏற்றார் போல விதிகளை மாற்றி அமைக்கிறார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 22 அதிமுக வேட்பாளர்களைத் திரும்பப் பெற வைத்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் அதிமுக வேட்பாளர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். ஒரு பக்கம் தேர்தல் ஆணையம் கண்டும் காணாமல் உள்ளது. காவல்துறையினர் அதிமுகவினரை மிரட்டுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். கோவை, சேலம், ஈரோடு ஆகிய மாநகராட்சிகளில் குற்றவாளிகள் முகாமிட்டுள்ளனர். அவர்கள் அதிமுகவினரை மிரட்டுகிறார்கள்.கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது. கடம்பூரில் 3 வார்டுக்கு மட்டும் தேர்தல் நிறுத்தாமல், அனைத்து வார்டுகளுக்கும் ரத்து செய்துள்ளது தவறானது. 

 

இந்தத் தேர்தல் தொடங்கப்பட்டதில் இருந்து வேட்புமனு தாக்கல், வேட்புமனு பரிசீலனை, வேட்புமனு திரும்ப பெற்றது வரை தினந்தோறும் விதிமுறைகளை ஆளுங்கட்சிக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் மாற்றிக் கொண்டிருக்கிறது. திமுகவிற்கு தேர்தல் ஏஜென்டாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. தமிழக தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக கடம்பூர் டவுன் பஞ்சாயத்தில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

காஞ்சிபுரம் மாநகராட்சி வேட்பாளர் ஜானகிராமன்,கொலை மிரட்டல் காரணமாக தற்கொலை செய்துள்ளார். ஆள் மாறாட்டம் செய்துள்ளனர். இதுவே தேர்தல் எவ்வாறு நடைபெறுகிறது என்பதற்கு சாட்சி. தலைமைச் செயலர் இறையன்பு, டி.ஜி.பி சைலேந்திர பாபு ஆகியோருக்கு தெரிந்து நடைபெறுகிறதா இல்லை இவர்கள் திமுகவிற்கு உடந்தையாக உள்ளார்களா என்பது தெரியவில்லை. திமுகவின் ஆர்மியாக தமிழகக் காவல்துறை செயல்படுகிறது. எங்கள் ஆட்சியில் நேர்மையான அதிகாரிகள் எனப் பெயர் எடுத்தவர்கள் அமைதியாக இருக்கிறார்கள், இல்லை துணை போகிறார்கள். இதையெல்லாம் தொகுத்து ஆளுநரிடம் புகார் கொடுத்துள்ளோம்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்