அ.தி.மு.க -வின் 51-வது பொன்விழா ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பாக விருத்தாச்சலம் வானொலி திடலில் பொன்விழா பொதுக்கூட்டம் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழித்தேவன் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் கலந்துகொண்டு பேசுகையில், " எம்.ஜி.ஆரால் தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் அ.தி.மு.க. 50 ஆண்டுகால கட்சி வரலாற்றில் 32 ஆண்டுகள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த மாபெரும் இயக்கமாகத் திகழ்கிறது. தி.மு.க தலைவர் ஸ்டாலின் அதிமுகவை பிளவுபடுத்தி விடலாம் என கனவு காண்கிறார். முதலமைச்சராக ஆட்சிக் கட்டிலில் அமர வைத்த, அ.தி.மு.க தொண்டர்களின் கோவிலாக இருக்கக்கூடிய தலைமைக் கழகத்தை தி.மு.கவுடன் இணைந்து காவல்துறை துணையுடன் உள்ளே புகுந்து சூறையாடிச் சென்ற ஓ.பி.எஸ் ஒரு கருங்காலி, துரோகி. இங்கு இருந்து எல்லாப் பதவிகளையும் சுகங்களையும் அனுபவித்த கருங்காலி ஓ.பி.எஸ்ஸை வைத்துக் கொண்டு அ.தி.மு.கவை அழித்து விடலாம் என நினைக்க வேண்டாம். அது முடியவே முடியாது.
தி.மு.க ஆட்சி முடிவதற்கு 5 வருடம் காத்திருக்கத் தேவையில்லை. தி.மு.க ஆட்சி எப்போது போகும் என திமுகவினரே புலம்புகின்றனர். மக்களின் பிரச்சனைகளை கண்டறிந்து முதலமைச்சர் ஸ்டாலின் தீர்க்கவில்லை. தேர்தலின் போது கொடுத்த 525 வாக்குறுதிகள் எதுவும் செய்யவில்லை. தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் 46 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் கொடுக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் அதில் 15 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது. தி.மு.க ஆட்சியில் கட்டுமான பொருட்கள் விண்ணை முட்டும் அளவில் உயர்ந்துள்ளது. மின்சார கட்டணம் உயர்ந்து விட்டது. சொத்துவரி உயர்ந்துவிட்டது. கிராமப்புறங்களிலும் வீடுகளுக்கான சொத்துவரி வசூலிக்கப்படவுள்ளது. மேலும் மக்களுக்கு அடுத்த பரிசாக பேருந்து கட்டணம் உயர உள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்ட மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்துகளின் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. உயிர் காக்கும் மருந்துகள் கூட அரசு மருத்துவமனையில் இல்லை.
மக்கள் பிரச்சனைகளை மறக்கடிப்பதற்காக தி.மு.க இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கையில் எடுத்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகள் நடத்தும் சன் சைன் பள்ளியில் தமிழில் பேசினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அப்பள்ளியில் ஹிந்தி கட்டாயமாக கற்றுக்கொள்ள வேண்டும் என நிர்ப்பந்திக்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் வரும். அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரும்" எனத் தெரிவித்தார்.
இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் முருகுமாறன், சிவசுப்பிரமணியன், நகர செயலாளர் சந்திரகுமார், ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், தம்பிதுரை, ரகுராமன், பச்சமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.