தமிழகம் முழுவதும் ஏப்ரல் மாதம் முதல் நடைபயணம் மேற்கொள்ள இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இன்று கடலூரில் நடந்த கூட்டத்தில் அதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம் கடலூரில் இன்று நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் மாநிலத் துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் மற்றும் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த செயற்குழு கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒன்றாக பாஜகவின் தேசியத் தலைவராக மீண்டும் ஜே.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் கட்சியின் வருங்கால நிகழ்ச்சிகள் தொடர்பான குறிப்புகள் வெளியிடப்பட்டது. அதில், பாஜக தலைவர் அண்ணாமலை ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி மாநில அளவிலான சுற்றுப்பயணத்தை திருச்செந்தூரில் இருந்து துவங்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்தான முழு விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைபயணத்தில் பெரும்பாலான தொண்டர்கள் பங்கேற்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு ரஃபேல் வாட்ச் விவகாரம் பூதாகரமாக வெடித்தபோது, விரைவில் மாநிலம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளேன். பாதயாத்திரையின் முதல் நாளில் எனது சொத்து விவரங்களை வெளியிடுவேன் என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் தெரிவித்ததாவது, “திமுகவினர் என்னுடன் ஊழல் குறித்து விவாதிக்க விரும்புவதால், நான் அதை எதிர்கொள்ள ஆவலுடன் இருக்கிறேன்.
10 ஆண்டுகால எனது வங்கிக் கணக்குகளின் பரிவர்த்தனைகள் (எனது ஒவ்வொரு வருமானமும் காட்டப்படும்), ஆகஸ்ட் 2011 முதல் ஐபிஎஸ் அதிகாரியாக நான் பொறுப்பேற்றது முதல் ராஜினாமா செய்யும் வரை ஈட்டிய வருமானம் , எனக்குச் சொந்தமான அசையும் அசையா சொத்துகளின் விவரங்கள்,... (2/5)
— K.Annamalai (@annamalai_k) December 18, 2022
நான் தமிழக பாஜக தலைவராகப் பொறுப்பேற்றதுக்கு முன்பு, மே மாதம் 2021ல் வாங்கிய எனது ரஃபேல் கடிகாரத்தின் விவரங்கள், அதன் ரசீது மற்றும் எனது வாழ்நாள் வருமான வரி அறிக்கைகள், 10 ஆண்டுக்கால எனது வங்கிக் கணக்குகளின் பரிவர்த்தனைகள் (எனது ஒவ்வொரு வருமானமும் காட்டப்படும்), ஆகஸ்ட் 2011 முதல் ஐபிஎஸ் அதிகாரியாக நான் பொறுப்பேற்றது முதல் ராஜினாமா செய்யும் வரை ஈட்டிய வருமானம், எனக்குச் சொந்தமான அசையும் அசையா சொத்துகளின் விவரங்கள், என்னிடம் உள்ள ஆடு மற்றும் மாடுகளின் எண்ணிக்கை என அனைத்தையுமே விரைவில், நமது பிரதமரே போற்றும் நம் தமிழக மக்களைச் சந்திப்பதற்காக மாநிலம் முழுவதும் நான் மேற்கொள்ளவிருக்கும் பாதயாத்திரையின் முதல் நாளில் வெளியிடுவேன்.
அன்றைய தினம் நான் பத்திரிகையாளர்களைச் சந்தித்து மேல் குறிப்பிட்ட அனைத்து விபரங்களையும் பொதுவெளியில் வெளியிட உள்ளேன். நான் அறிவித்ததை விட ஒரு பைசா அதிகமான சொத்தை யாரேனும் கண்டுபிடித்தால், எனது சொத்துக்கள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க நான் தயார்” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், தனது நடைபயணத்தை அறிவித்துள்ள அண்ணாமலை தான் சொல்லியபடி ரஃபேல் வாட்ச் பில் மற்றும் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவாரா என இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.