திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் வசித்து வருபவர் ஆர்த்தி. இவருக்கு திருச்சி சண்முகா நகர் மூன்றாவது குறுக்கு சாலையில் சொந்தமாக ஒரு பள்ளி மற்றும் வீடு இணைந்து உள்ளது. இந்த வளாகத்தை கடந்த ஒரு வருட காலமாக காலி செய்ய மறுப்பு தெரிவித்தும், 6 மாத வாடகை தராமலும் பிரச்சினை செய்து வருவதாகவும், அதைக் கேட்டால் தனக்கு கொலைமிரட்டல் விடுப்பதாகவும் பா.ஜ.க.வின் ஓ.பி.சி. அணி மாநிலச் செயலாளர் சூரியா சிவா மற்றும் அவரது மனைவி அத்தினா மீது கடந்த 2 ஆம் தேதி காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆர்த்தி புகார் மனு அளித்திருந்தார்.
அதனையொட்டி இன்று பாஜகவின் ஓ.பி.சி அணியின் மாநிலச் செயலாளர் சூரியா சிவா மற்றும் அவரது மனைவி அத்தினா ஆகிய இருவரும் திருச்சி காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர். முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சூரியா சிவா, தன் மீது கொடுக்கப்பட்ட புகாரில் உண்மை இல்லை எனக் கூறி, ஆர்த்தி மற்றும் அவரது கணவர் இணைந்து பள்ளி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து குண்டர்களை வைத்து மிரட்டியதாக ஆதாரங்களுடன் புகார் அளிக்க வந்துள்ளதாகக் கூறினார்.
மேலும், காவல்துறைக்கு என் மீது எப்படியாவது வழக்கு தொடர வேண்டும் என்ற நோக்கில் யார் புகார் கொடுத்தாலும் உடனடியாக அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்து, என் மீது வழக்கு ஜோடிக்கப்பட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணம் ஆளும் கட்சியாகிய திமுகவை நான் தொடர்ந்து விமர்சிப்பதால் என்னை பழிவாங்கும் நோக்கத்தோடு காவல்துறை செயல்படுகிறது. இந்தப் பள்ளி வளாகக் கட்டிடம் தொடர்பான புகாரிலும் இதே போன்று என் மீது காவல்துறை திட்டமிட்டு வழக்கு பதிவு செய்துள்ளது என்று தெரிவித்தார்.