பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு கடந்த 2021-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ரெங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் களமிறங்கின.
மொத்தமுள்ள 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ்-10, பாஜக-6, திமுக-6, காங்கிரஸ்-2, சுயேட்சைகள்-5 இடங்களைக் கைப்பற்றின. என்.ஆர். காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தது. ரெங்கசாமி முதலமைச்சரானார். பாஜகவை சேர்ந்த நமச்சிவாயம் உள்துறை அமைச்சரானார். சபாநாயகராக பாஜகவை சேந்த ஏம்பலம் செல்வம் நியமிக்கப்பட்டார். தவிர 3 நியமன எம்.எல்.ஏ.க்களில் என்.ஆர்.காங்கிரசுக்கு ஒரு இடம்கூட பாஜக தரவில்லை. 3 இடங்களையும் பாஜகவே நிரப்பிக் கொண்டது. மேலும் 5 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களில் 3 பேரை வளைத்து வைத்திருக்கிறது பாஜக.
ஆட்சி அமைக்கப்பட்டதிலிருந்தே ரெங்கசாமிக்கும் பாஜகவுக்கும் ஒத்துப் போகவில்லை. அமைச்சரவை ஒதுக்கீடு, நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம், பாண்டிச்சேரி ராஜ்யசபா எம்.பி. சீட் தொடங்கி ஒவ்வொரு விசயத்திலும் ரெங்கசாமிக்கு எதிராக கிடுக்கிப்பிடி போட்டபடி இருந்தது பாஜக. ஆட்சியிலும் முதல்வர் ரெங்கசாமி எடுக்கக்கூடிய அனைத்து நிர்வாக நடவடிக்கைகளிலும் பாஜகவின் தலையீடுகள் அதிகமாக இருந்தன. வாரிய பதவிகளை தனது கட்சிக்காரர்களுக்கு வழங்க ரெங்கசாமி முடிவெடுத்த போதும் அதற்கும் முட்டுக்கட்டைப் போட்டு வருகிறது பாஜக.
அண்மையில் டெல்லி சென்ற பாண்டிச்சேரியின் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது, பாண்டிச்சேரியின் அரசு நிர்வாகம் குறித்து பல்வேறு தகவல்களையும், அரசியல் ரீதியிலான பிரச்சனைகளையும் பகிர்ந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இந்த மாதம் கடைசி வாரத்தில் பாண்டிச்சேரிக்கு வரவிருக்கிறார் அமித்ஷா. இதற்கான பயணத்திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பயணம் குறித்து தமிழக பாஜக தரப்பில் விசாரித்தபோது, “ரெங்கசாமி தலைமையிலான ஆட்சியில் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். மக்கள் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை. பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது. ஏற்கனவே பாண்டிச்சேரியில் பாஜகவுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். சுயேட்சை எம்.எல்.ஏ.க்களில் 3 பேர் எங்களை ஆதரிக்கின்றனர். ஆக மொத்தம் 12 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவிடம் இருக்கிறது. ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மைக்கு 16 இடங்கள் தேவை.
அந்த வகையில், இன்னும் 4 எம்.எல்.ஏ.க்கள் தேவைப்படுகிறது. ரெங்கசாமி கட்சியில் அவருக்கு எதிராக 4 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியடைந்துள்ளனர். அவர்களிடம் ரகசியமாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது மட்டுமல்ல; திமுக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் சிலரை இழுக்கும் முயற்சியிலும் பாஜக இறங்கியிருக்கிறது.
அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் எதிர்பார்ப்பு கொஞ்சம் கூடுதலாக இருக்கிறது. அவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும் பட்சத்தில் பாண்டிச்சேரியில் ஆட்சி கவிழ்ப்பு உறுதியாகும். பாஜக தலைமையில் புதிய ஆட்சி உருவாகும். பாண்டிச்சேரிக்கு அமித்ஷா வருகையின் போது நடக்கும் பேச்சு வார்த்தையில் ஆட்சி கவிழ்ப்புக்கு இறுதி வடிவம் கொடுக்கப்படும். அதிருப்தியாளர்களின் எதிர்பார்ப்புகளை அமித்ஷா ஏற்றுக் கொண்டால் பாண்டிச்சேரியில் ஆட்சி மாற்றமும் உறுதியாகும்” என்று விரிவாகச் சுட்டிக்காட்டுகிறார்கள்.
பாண்டிச்சேரியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் முதலமைச்சர் நாற்காலியை கைப்பற்ற நமச்சிவாயம், செல்வம் மற்றும் நியமன எம்.எல்.ஏ.க்கள் மூவர் உள்ளிட்ட முக்கிய தலைகளிடையே போட்டி அதிகரித்துள்ளது. பாஜகவின் இந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை தடுக்க தனது அரசியல் அனுபவங்களை பயன்படுத்த துவங்கியுள்ளார் ரெங்கசாமி. ஆனால், பலனளிக்குமா என்பது மில்லியன டாலர் கேள்வியாக இருக்கிறது என்கிறது பாண்டிச்சேரி அரசியல் களம்.