ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் லட்சுமணனின் இறுதி மரியாதை நிகழ்வு நேற்று மதுரையில் அவரது சொந்த ஊரான டி.புதுப்பட்டியில் நடைபெற்றது. முன்னதாக விமான நிலையம் வந்த அவரது உடலுக்கு தமிழக அரசு சார்பில் தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இறுதி அஞ்சலி செலுத்தி இருந்தார். இந்த நிகழ்விற்கு பிறகு வெளியே வந்த பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் காரின் மீது பாஜகவினர் காலணி வீசியது பதற்றத்தை ஏற்படுத்தியது. அரசு மரியாதை செய்த பிறகுதான் பாஜக மற்றும் பிறகட்சி தொண்டர்கள் மரியாதை செய்ய முடியும் என கூறியதால் இந்த மோதல் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பாஜகவின் மதுரை மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் பாஜகவிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று நள்ளிரவு செய்தியாளர்களைச் சிந்தித்து பேசிய டாக்டர் சரவணன், ''நானும் பாஜக தலைவர் அண்ணாமலையும் அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்த போது வெளியே இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வு நடந்து விட்டது. வீட்டிற்குப்போன பிறகு மன உறுத்தலாகவே இருந்தது. பிறகு தெளிவு பெற்றது. அமைச்சர் வெளிநாட்டில் படித்தவர் அதனால் அவருடைய தமிழ் அந்த அளவுக்கு இருக்கிறது. 'எந்த தகுதி' என அவர் கேட்பது இங்கிருக்கும் புரோட்டோகால். வீரரின் உடலை கவர்மெண்ட் ரிசீவ் செய்து அவங்க ஊருக்கு அனுப்புகிறோம். அவங்க வீட்டில் போய் மரியாதை செலுத்தலாம், அவர்களது கிராமத்தில் போய் மரியாதை செலுத்தலாம் அந்த அர்த்தத்தில் அவர் சொல்லி இருக்கிறார். வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மன்னித்து விடுங்கள். நான் இனி பாஜகவில் தொடர மாட்டேன். எனக்கு இந்த மத அரசியல், வெறுப்பு அரசியல் பிடிக்கவில்லை. பாஜகவில் நான் தொடர போவதில்லை காலையில் ராஜினாமா கடிதம் அளிக்கப் போகிறேன். திமுகவில் சேரப் போகிறீர்களா என்று கேட்டால் நிச்சயமாக சேர்ந்தால் தப்பில்லை. திமுக எனது தாய் வீடு தானே என்று சொல்ல வருகிறேன். இங்கு உள்ள மத அரசியல் என்பது கடுமையாக இருக்கிறது. நான் ஒரு மருத்துவராக எல்லாருக்கும் பொதுவான மனிதராக இருக்க நினைக்கிறேன். எனவே துவேசத்தை என்னால் செய்ய முடியவில்லை. தாங்க முடியவில்லை'' என்றார்.
முன்னதாக நேற்று பிற்பகல் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை விமர்சித்து பேசி இருந்த டாக்டர் சரவணன் நள்ளிரவு அமைச்சரை சந்தித்த பிறகு அவர் பேச்சில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.