'The OPS is going against the party knowingly and even knowingly'-EPS filed a petition in the Supreme Court!

அதிமுகவின் செயல்பாட்டிற்கு ஓபிஎஸ் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என இபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், வரும் ஜூலை 11- ஆம் தேதி அன்று சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் ஒருபுறம் தீவிரமாக நடந்து கொண்டிருக்க, மற்றொருபுறம் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அ.தி.மு.க.வின் தலைமைக்கழகம் என்ற பெயரில் அழைப்பிதழும் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கூடாது எனக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பும், பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் என அனைத்திலும் தனித்தனியே மனுத்தாக்கல் செய்துள்ளனர். குறிப்பாக, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பு ஆதரவாளர்கள் பொதுக்குழுவை நடத்தக்கூடாது என்று தீவிர நடவடிக்கைகளையும், ஆலோசனைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில், அதிமுகவின் செயல்பாட்டிற்கு ஓபிஎஸ் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என இபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த மனுவில், 'ஓபிஎஸ் கட்சி நிதியை விடுவிக்காததால் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை உள்ளது. இதனால் கட்சி செலவுகளுக்கான தொகையை எடுக்க முடியாத நிலை இருக்கிறது. உள்ளாட்சி இடைத்தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தவும் ஓபிஎஸ் ஒத்துழைப்பு தரவில்லை. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கெடுக்க அழைப்பு விடுத்தும் ஓபிஎஸ் பங்கேற்கவில்லை. பொருளாளர் என்ற முறையில் கடமையைச் செய்யாமல் கட்சி நலனை கெடுக்கும் செயலில் ஓபிஎஸ் ஈடுபடுகிறார். தனக்கான செல்வாக்கு, நம்பிக்கை கட்சியினரிடையேயும், பொதுக்குழு உறுப்பினர்களிடையேயும் இல்லை என தெரிந்தும், உணர்ந்தும் கூட தொடர்ந்து கட்சிக்கு விரோதமாகவே ஓபிஎஸ் நடந்து வருகிறார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.