Skip to main content

'திசைகளை வெல்வதற்கான முதற்கதவு திறந்துள்ளது'-இரட்டிப்பு மகிழ்ச்சியில் தவெக

Published on 08/09/2024 | Edited on 08/09/2024
'The first door to conquer the directions is open'-in double joy tvk


நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கியதோடு, தொடர்ந்து அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அண்மையில் பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டது. கொடிக்கான விளக்கத்தை விரைவில் நடைபெற இருக்கும் மாநாட்டில் தெரிவிப்போம் அதுவரை கட்சியினர் கட்சிக் கொடியை முறையாக அனுமதி பெற்று ஏற்றிக் கொண்டாடுங்கள் என விஜய் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் விக்கிரவாண்டியில் தவெக நடத்தும் முதல் மாநாட்டிற்கு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னதாக தமிழக வெற்றிக் கழக கட்சியின் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி அளித்திருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் அதனை காவல்துறை மறுத்து இருந்தது. 

காவல்துறை சார்பில் கேட்கப்பட்டிருந்த 21 கேள்விகளுக்கும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பதில் அளிக்கப்பட்ட நிலையில் அக்கட்சியின் முதல் மாநாட்டிற்கு அனுமதி கிடைக்குமா கிடைக்காதா என்ற கேள்விகள் எழுந்திருந்தது. இந்நிலையில் மாநாட்டிற்கு நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதேபோல தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரை தேர்தல் ஆணையம் பதிவு செய்து அங்கீகாரம் அளித்துள்ளதை கட்சியின் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்கின்ற அடிப்படை கோட்பாடோடு நாம் அரசியலை அணுகுவதும் ஒருவிதக் கொள்கை கொண்டாட்டமே. எனினும் முழுமையான கொண்டாட்டத்திற்காகவும் அரசியல் கட்சிக்கான சட்டப்பூர்வமான பதிவுக்காகவுமே நாம் இதுவரை காத்திருந்தோம். இப்போது அதற்கான அனுமதியும் கிடைத்துவிட்டது,

தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்காக கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தோம். அதை சட்டப்பூர்வமாக பரிசீலித்து நமது நாட்டின் தேர்தல் ஆணையம் தற்போது நம் தமிழக வெற்றிக் கழகத்தை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்து தேர்தல் அரசியலில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக பங்குபெற அனுமதி வழங்கி உள்ளது.

இதை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். திசைகளை வெல்லப் போவதற்கான முன்னறிவிப்பாக இப்போது முதற்கதவு நமக்காக திறந்து இருக்கிறது. இச்சூழலில் நமது கழகத்தின் கொள்கை பிரகடன முதல் மாநில மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள். 

தடைகளை தகர்த்தெறிந்து, கொடி உயர்த்தி, கொள்கை தீபம் ஏந்தி தமிழக மக்களுக்கான தலையாய அரசியல் கட்சியாக தமிழ்நாட்டில் வலம் வருவோம். வெற்றிக் கொடி ஏந்தி மக்களை சந்திப்போம். வாகை சூடுவோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்