
சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட முழக்குத்துறை கடற்கரைக்குச் சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட சாமி சிலைகள் மாசி மகம் திருவிழாவிற்கு ஒவ்வொரு ஆண்டும் வந்து செல்லும். இந்த நிலையில் வைணவ தளமாக விளங்கும் ஸ்ரீமுஷ்ணம் பூவராக சாமி சிலையும் மாசி மகத்தையொட்டி கிள்ளை கடற்கரைக்கு வரும்போது கிள்ளை தைக்கால் பகுதியில் இஸ்லாமியர்கள் மேளதாளத்துடன் வரவேற்பது மதங்களை கடந்த மாசி மக திருவிழாவாக ஒவ்வொரு ஆண்டும் அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் விழாவாக அமைகிறது.
இந்தநிலையில் இந்தாண்டு கிள்ளையில் மார்ச் 12, 13,14 ஆகிய 3 நாட்கள் மாசிமகத் திருவிழா நடைபெற்றது. இதில் 3-வது நாளான இன்று(14.3.2025) மக திருவிழாவிற்கு பூவராக சாமி வருகை தந்தபோது கிள்ளை தைக்கால் தர்கா டிரஸ்டி சையது சக்காப் தலைமையில் இஸ்லாமியர்கள் மற்றும் கிள்ளை பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர் கலந்து கொண்டு மேளதாளங்கள் முழங்க பச்சரிசி, மாலை, தேங்காய், பழம் சீர் வழங்கி வரவேற்றனர்.
அதேபோல் பூவராக சுவாமி கோவிலில் இருந்து எடுத்துவரப்பட்ட பூமாலை மற்றும் நாட்டு சர்க்கரையை தர்கா நிர்வாகத்திடம் வழங்கினர். இதனைப் பெற்றுக்கொண்டு மேளதாளத்துடன் சென்று அப்பகுதியில் உள்ள தர்காவில் வைத்து பாத்தியா ஓதி அனைவருக்கும் நாட்டு சக்கரை வழங்கப்பட்டது. இதுகுறித்து கிள்ளை தர்கா டிரஸ்டி சையது சக்காப், “கடந்த 1892 ஆம் ஆண்டு முதல் இந்நிகழ்வை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறோம். அவர்கள் எடுத்துவரும் பிரசாதத்தை பெற்று பாத்திய ஓதி அனைவரும் சுபிட்சமாக இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்வோம்” என்றார்.
கிள்ளை பேரூராட்சி மன்ற துணைத் தலைவரும் திமுக மாநில செயற்குழு உறுப்பினருமான கிள்ளை ரவீந்திரன் கூறுகையில், “இந்த தர்காவில் பல 100 ஆண்டுகளாக மதங்களைக் கடந்த மாசிமகமாக இந்த நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகவும் ஒவ்வொரு ஆண்டும் அமைகிறது. இதில் கிள்ளை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நாங்கள் வரவேற்று அனுப்பி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.