கரோனா நோயால் பாதிக்கப்படுவோர் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதற்கு சென்னை அண்ணா அறிவாலயம் வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தை அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாநகராட்சி ஆணையரிடம் கடிதம் அளித்துள்ளார்.
![kalaignar arangam](http://image.nakkheeran.in/cdn/farfuture/gMrpP9RlbImTrEvNHhPa6ekEh3IP7XiXJ0bYhbzfUpQ/1585640102/sites/default/files/inline-images/wq21_1.jpg)
தி.மு.க. அறக்கட்டளைக்குச் சொந்தமான 'அண்ணா அறிவாலயத்தின்' வளாகத்தில் இருக்கும் 'கலைஞர் அரங்கத்தை' கொரோனா நோயால் பாதிக்கப்படுவோர் தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்ள, அரசு சார்பில் பயன்படுத்திக்கொள்ளுமாறு தி.மு.க. அறக்கட்டளையின் தலைவரும் மேலாண்மை அறங்காவலருமான மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை சென்னை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் மா. சுப்பிரமணியன் எம்.எல்.ஏ., சென்னை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையர் ஜி.பிரகாஷ் ஐ.ஏ.எஸ் அவர்களை நேரில் சந்தித்து அளித்தனர்.
![ssss](http://image.nakkheeran.in/cdn/farfuture/an6NDutVggvAYL2Llr855cIMIUsUiI0X7mfFUKOQ7YU/1585640165/sites/default/files/inline-images/sssssssssssss.jpg)
ஏற்கனவே, கொரோனா நோய்த் தடுப்பு பணிகள் மற்றும் நிவாரண உதவிகளுக்காக திமுக அறக்கட்டளை சார்பில் தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் நிதி அளிக்கப்படுகிறது என்றும், மேற்கண்ட நிதி ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் திமுக எம்எல்ஏக்கள் ஒரு மாத ஊதியத்தை அளிப்பார்கள் என்றும் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதனை இல்லாமல் திமுக எம்எல்ஏக்கள் பலர் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மாவட்ட ஆட்சியரிடம் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு கொடுத்து உதவி வருகின்றனர்.