கோவை மாவட்டம் தேவராயபுரத்தில் நடந்த திமுக கிராமசபைக் கூட்டத்தில், அதிமுக பெண் நிர்வாகி ஒருவர் ரகளையில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
கோவை தொண்டாமுத்தூரில் ஸ்டாலின் பங்கேற்ற கிராமசபை கூட்டம் நடந்தது. அதில் திடீரென்று எழுந்து பேசிய ஒரு பெண்ணிடம், “நீங்க எந்த ஊரும்மா?” எனக் கேட்டார் ஸ்டாலின். உடனே அந்தப் பெண், “எந்த ஊருன்னு கூடத் தெரியாம எதுக்கு கிராம சபை கூட்டம்” என ஒருமையில் பேசினார்.
உடனே கோபமான கட்சியினர், அந்தப் பெண்ணை வெளியேறுமாறு கூறினர். அப்போது அந்தப் பெண், ஸ்டாலினுக்கு எதிராக கோஷமிட்டார். உடனே போலீஸ் அந்தப் பெண்ணை அங்கிருந்து மீட்டுச் சென்றது. அந்தப் பெண்ணின் பெயர் வி. பூங்கொடி. அதிமுகவின் மாநில மகளிரணி துணைத் தலைவராக இருக்கிறார். வாளையார் ரோடு சுகுணாபுரத்தில் பூங்கொடியின் வீடு இருக்கிறது.
கூட்டத்தில் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கில்தான் தொண்டாமுத்தூர் வரை வந்திருக்கிறார் எனத் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கிராம சபை கூட்டத்தின் நிறைவில் திமுக தலைவர் ஸ்டாலின் நிறைவுரை ஆற்றினார்.
அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், “கிராம சபைக் கூட்டத்தின் இடையில் ஒரு சகோதரி் கலவரம் செய்ய முயன்றார். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இந்த காரியத்தைச் செய்திருக்கிறார்.
நேற்றே எனக்கு இந்தத் தகவல் தெரியும், எப்படியும் அ.தி.மு.க.வினர் இடையூறு செய்வார்கள் என எதிர்பார்த்ததுதான். நீங்கள் ஒரு கூட்டத்தில் இப்படி செய்யலாம். இது தொடர்ந்தால் அ.தி.மு.க.வின் எந்தக் கூட்டத்தையும் நாங்கள் நடத்தவிட மாட்டோம். இது கட்டுபாடு உள்ள இயக்கம். அதனால்தான் அவரைச் சரியாக கண்டுபிடித்து எந்தப் பிரச்சனையும் தடையும் இல்லாமல் அவரை வெளியே அனுப்பிவிட்டோம்.
அமைச்சர் வேலுமணி இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். தொடர்ந்தால் நீங்கள் மட்டுமல்ல, உங்கள் முதல்வரும் எந்தக் கூட்டத்திலும் பேச முடியாது. தி.மு.க. தொப்பி அணிந்துகொண்டு வந்து தி.மு.க. பெயரில் அ.தி.மு.க.வினர் கலவரம் ஏற்படுத்த முயல்கின்றனர். தைரியம் இருந்தால் அ.தி.மு.க. என்றே சொல்லி இதில் கலந்திருக்க வேண்டும்” என்றார்.
கூட்டத்திற்கு வெளியே வந்த அந்தப் பெண்ணிடம், ஒருவர் ‘அமைச்சர் பேசுகிறார்’ என செல்போனைக் கொடுக்கிறார். அந்த செல்போனை வாங்கி அந்தப் பெண் பேசும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.