Skip to main content

மீண்டும் சர்ச்சையான ஆளுநரின் பேச்சு; எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்

Published on 22/06/2023 | Edited on 22/06/2023

 

Controversial Governor's Speech Again; MP Su. Venkatesan condemned

 

கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வள்ளலாரின் 200 ஆவது ஜெயந்தி விழா நடந்தது. இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

 

அப்போது பேசிய அவர், “சனாதன தர்மத்தின் மாணவனாகிய நான் பல ரிஷிகளின் நூல்களைப் படித்துள்ளேன். அதில் வள்ளலாரின் நூல்கள் பிரமிப்பை ஏற்படுத்தின. பத்தாயிரம் வருட சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார். அறியாமை மற்றும் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே சிலர் சனாதன தர்மத்தை எதிர்க்கிறார்கள். சனாதன தர்மத்தை ஏற்றாலும் எதிர்த்தாலும் அவர்களும் சனாதன தர்மத்திற்குள்ளேயே இருப்பார்கள். ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என வள்ளலார் கூறியது சனாதன தர்மத்தின் எதிரொலி.

 

இந்தியாவில் சிறுதெய்வம், பெருந்தெய்வம் வழிபாடு இருந்தபோது ஒருவரும் சண்டையிட்டுக் கொள்ளவில்லை. வெளியில் இருந்து புதிதாக வந்த மதங்கள் தங்களது மதம் பெரிது எனக் கூறியதால் தான் பிரச்சனை வந்தது. ஆங்கிலேயர்கள் நமது அடையாளத்தை அழிக்க நினைத்தனர். அவர்களது நாட்டு மக்களைக் கொண்டு வந்து நமது நம்பிக்கைகளை மாற்ற முயன்றனர். ஜி.யு.போப், பிஷப் கால்டுவெல் போன்றோரும் அதன் ஒரு பகுதி தான். நமது நம்பிக்கைகளை அழிக்க வந்தவர்கள் தான் அவர்களும். தமிழ்நாடு இந்தியாவின் ஆன்மீகத் தலைநகரம்” என்றார்.

 

ஆளுநரின் இந்த கருத்துக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், “மதித்த சமயதம் வழக்கெல்லாம் மாய்ந்தது, வர்ணாசிரமெனும் மயக்கமும் சாய்ந்தது” என்று சனாதனத்தை எதிர்த்த வள்ளலாரை சனாதனத்தின் உச்ச நட்சத்திரம் என்கிறார் ஆளுநர். ஆளுநரே, வள்ளுவரும் வள்ளலாரும் நீங்கள் விழுங்கவே முடியாத கலகக்குரல்கள் மட்டுமல்ல, சனாதனத்தை விரட்டிய ஆதிக்குரல்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'இந்தியாவிலேயே இவரைப் போன்ற எம்பி யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை' -கமல்ஹாசன் பேச்சு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Kamal Haasan campaign in madurai

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் மதுரையில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கூட்டத்தில் பேசிய அவர், ''இவரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் வழக்கமாக என்னை கேட்பார்கள் அரசியலுக்கு ஏன் வந்தீர்கள்? நீங்கள் எப்படி கையெழுத்து போட போகிறீர்கள் என்று. வித்தியாசமான அரசியல் செய்ய வந்திருக்கிறேன் என்று பெருமையாக மார் தட்டிக் கொண்டேன். இனி நாம் செய்ய போவதையும் செய்து இருப்பதைதான் சொல்ல வேண்டுமே தவிர, செய்யத் தவறியவர்களின் குற்றங்களை பட்டியலிடுவது என்பது நேர விரையம். அது உங்களுக்கே தெரியும். எங்கெங்கு தப்பு நடந்திருக்கிறது என்பதை சொல்லி உங்க நேரத்தையும் எங்க நேரத்தையும் வீணடிக்க கூடாது.

நவீன அரசியல் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ளும் அரசியலாக இருக்கக்கூடாது. ஒருவரை ஒருவர் திருத்திக் கொள்ளும் அரசியலாக இருக்க வேண்டும். அதனால் நான் சொல்கிறேன் இவர் செய்ததை சொல்கிறேன். கோவிட் என்ற காலகட்டத்தில் ஒரு சாதாரணமாக எம்பிக்கு  கொடுக்க வேண்டிய ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீடு கூட இல்லாத நேரத்தில், பல நற்பணிகளை செய்து இருக்கிறார். அவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க வேண்டியது உங்களுடைய கடமை. இந்த வட்டாரத்திற்கு நீங்கள் செய்யும் நல்லது.

இவர் நல்ல எழுத்தாளர், பெரிய பெரிய நாவல்களை எழுதி இருக்கிறார் என்பதெல்லாம் சொல்வதை விட ஒரு இடத்திற்கு பம்ப் செட் போட்டு கொடுத்திருக்கிறார். ஒரு விவசாய ஊருக்கு ரயில் பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறார். இவர் செய்த நற்பணிகளை எல்லாம் திரட்டி ஒரு வீடியோ ஆவணம் செய்திருந்தார்கள். அதை வெளியிடும் பெருமை எனக்கு கிடைத்தது. நான் சொல்லுவது மிகை என்றால் திருத்திக் கொள்கிறேன். ஆனால் இந்தியாவிலேயே இப்படி, தான் செய்த விஷயங்களை பட்டியல் போடும் அளவிற்கு வேலை செய்த எம்பிக்கள் என்று யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை'' என்றார்.

Next Story

வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணி; கிராம மக்கள் எதிர்ப்பு!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Construction of Vallalar International Centre; Villagers issue

கடலூர் மாவட்டம் வடலூரில் ‘வள்ளலார் சர்வதேச மையம்’ அமைக்கப்படும் என்ற வாக்குறுதியைக் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. இதனையடுத்து நடைபெற்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதனைத் தொடர்ந்து இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வடலூரில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை ஏற்கெனவே வெளியிட்டிருந்தார்.

இத்தகைய சூழலில்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சர்வதேச மைய கட்டடம் கட்ட வடலூர் பெருவெளியில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பின்னர் இதற்கான பணிகள் தொடந்து நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் வடலூர் பெருவெளியில் சர்வதேச மையம் அமைப்பதற்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர், மற்றும் பார்வதிபுரம் கிராமத்தினர் எனப் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பார்வதிபுரம் கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடிகளை ஏற்றி தங்களது கண்டனத்தை தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையும் புறக்கணிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். பார்வதிபுர கிராம மக்களால் தானமாக கொடுக்கப்பட்ட இடமான பெருவெளியில் எந்தக் கட்டடமும் கட்டக் கூடாது எனப் பார்வதிபுர கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.