பாஜகவின் அதிகார பலத்தையும் தாண்டி கர்நாடகத்தில் காங்கிரஸ் வென்றுள்ளதாக முன்னாள் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இருப்பினும் அடுத்த முதல்வர் யார் என்பதில் முன்னால் முதல்வர் சித்தராமையா மற்றும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் இடையே போட்டி நிலவி வந்த நிலையில் பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின் சித்தராமையா முதல்வர் என்றும், டி.கே.சிவகுமார் துணை முதல்வர் என்று காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் பெங்களூருவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கர்நாடக மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் பதவியேற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே உள்பட 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
இவ்விழாவில் பேசிய ராகுல் காந்தி, “கர்நாடகத் தேர்தலில் வெற்றி பெற பாஜக அனைத்து பலத்தையும் பயன்படுத்தியது. அவர்களின் அதிகார பலத்தையும் தாண்டி கர்நாடகத்தில் காங்கிரஸ் வென்றது. ஊழலற்ற சுதந்திரமான ஆட்சியை காங்கிரஸ் தரும். பெண்கள் இனி பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம். கர்நாடக மக்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். பட்டதாரி இளைஞர்களுக்கு உதவித்தொகை, பெண்களுக்கு ரூ. 2000 உரிமைத் தொகை, 10 கிலோ இலவச அரிசி ஆகிய 5 முக்கிய வாக்குறுதிகளை சொன்னபடி நிறைவேற்றுவோம்” என்றார்.