தமிழகம் உட்பட 17 மாநிலத்தில் உள்ள 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் மார்ச் 26 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கும் நிலையில் திமுக சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் மூன்று பேர் போட்டியிடுகின்றனர். போட்டியிடுபவர்கள் யார் யார் என்பதற்கான திமுக வேட்பாளர்கள் பற்றிய அறிவிப்பு திமுக தலைமை அறிவித்தது. திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், வழக்கறிஞர் என் ஆர் இளங்கோ ஆகியோர் மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திமுக மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களில் ஒரு உறுப்பினர் பதவியை சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் என்று திமுகவில் இருக்கும் சிறுபான்மையினர் எதிர்பார்த்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் திமுக தலைமை கொங்குமண்டலத்தில் திமுகவை வலுப்பெற கொங்குமண்டலத்தை சேர்ந்த அந்தியூர் செல்வராஜ்க்கு வாய்ப்பை வழங்கியது என்கின்றனர். அதே போல் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியும் திமுகவிடம் இருந்து ஒரு ராஜ்யசபா சீட் கேட்டு அழுத்தம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. மேலும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்காததால், இது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரிடம் பேசலாம் என்று தமிழக காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் திமுக மீது காங்கிரஸ் கட்சி அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதோடு வரும் சட்டமன்ற தேர்தலில் கூடுதல் சீட்டுகளை கேட்கவும் தமிழக காங்கிரஸ் நினைப்பதாக தெரிவிக்கின்றனர்.