தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் அக்கட்சியின் கொள்கைப்பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் தேனி மக்களவைக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவடா செய்ததாக புகார் எழுந்திருக்கிறது. போடிநாயக்கனூர் பகுதிக்கு உப்பட்ட மேலசொக்கநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பது போன்று வீடு தோறும் சென்று வாக்கு ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் விநியோகித்ததாகவும், சொக்கநாதபுரம் பேரூராட்சியின் முன்னாள் சவிதாஅருண்பிரசாத் பணப்பட்டுவாடா செய்வதாக வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் அந்த வீடியோவில் இருப்பது தான் அல்ல என்று சவிதாஅருண்பிரசாத் கூறியிருக்கிறார். இருப்பினும் இதுதொடர்பாக அமமுக சார்பில் போடிநாயக்கனூர் தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பின்போது, தேனி மாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி பல்தேவ்விடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், இதுதொடர்பாக எப்.ஐ.ஆர். கொடுக்குமாறு சொல்லப்பட்டது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.