மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை எம்.எல்.ஏ.வுமான மு.தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முதுபெரும் தேசிய தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான ஐயா நல்லக்கண்ணு அவர்களை, அவர் வசித்து வந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்பிலிருந்து வெளியேற்றியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
நமது காலத்தில் வாழும் காமராஜராகவும், கக்கனாகவும், காயிதே மில்லத்தாகவும் பார்க்கப்படும் ஒரே தலைவர் அவர் மட்டுமே. பொது மக்களின் தனிப்பட்ட அன்புக்குரிய, அப்பழுக்கற்ற மாபெரும் தலைவராக அவர் வாழ்ந்து வருகிறார்.
அவரை போன்ற தியாகிகளுக்குத்தான் வீட்டு வசதி வாரியத்தில் முன்னுரிமை தர வேண்டும். இவர்களை போன்றவர்களுக்கு அங்கு வாய்ப்பு இல்லையென்றால், பலம் பொருந்திய அரசியல் தலைவர்களுக்கும், செல்வாக்கு மிக்கவர்களுக்கும் தான் அங்கு வாய்ப்பா? என கேள்வி எழுகிறது.
இந்த செயல் மூலம் தமிழக அரசு ஒரு பெரும் வரலாற்று தவறை செய்திருக்கிறது. உடனடியாக தமிழக முதல்வர் இதில் தலையிட்டு, ஐயா நல்லக்கண்ணு அவர்களுக்கு தமிழக வீட்டு வசதி வாரியத்தில் மாற்று இடம் வழங்கிட முன் வரவேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
அது போல் தூய பொது வாழ்வுக்கு சொந்தக்காரரான மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கன் அவர்களின் குடும்பத்தையும், தமிழக வீட்டு வசதி வாரியத்திலிருந்து வெளியேற வலியுறுத்துவதாக தகவல் வருகிறது. இந்த முயற்சியையும் தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம் என கூறியுள்ளார்.