அதிமுகவில் இருந்து விலகிய ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த கோவை செல்வராஜ் தற்போது திமுகவில் இணைந்துள்ளார்.
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த, கோவையில் மாவட்டச் செயலாளராக இருந்த கோவை செல்வராஜ், கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்சியில் இருந்து விலகிய நிலையில், தற்போது முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கோவை செல்வராஜ், "கஷ்டப்படும் ஏழை எளியப் பெண்கள், கூலி வேலைக்குச் செல்லும் பெண்கள் எனப் பலதரப்பட்ட பெண்கள் கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு வேலைக்கு வருகிறார்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் தினசரி ரூ.60 முதல் ரூ.70 வரை பேருந்துக் கட்டணம் மிச்சமாகிறது. இதனால் பெண்கள் மாதம் ரூ.1500 வரை சேமித்து வைக்கிறார்கள். அதனால் அவர்களின் ஆதரவு முதல்வர் ஸ்டாலினுக்கு எப்போதும் உண்டு.
இன்றைய தினம் வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் எந்தவித அரசியல் தலையீடும் இல்லாமல், எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல், மின்சாரத் தட்டுப்பாடின்றி தமிழகம் முழுவதும் மின்சாரத்தை வழங்கி, மின்சாரத் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் அண்ணன் செந்தில் பாலாஜி. 100 யூனிட் இலவச மின்சாரத்தை திமுக அரசு நிறுத்திவிடும் என்று தவறாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர். கடந்த ஆட்சியில் தங்கமணி அமைச்சராக இருக்கும் பொழுது 1000 விவசாயிகளுக்கு தான் இலவச மின்சாரம் கொடுத்தார்கள். ஆனால் இன்றைய தினம் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்திருக்கிறார்கள் முதல்வரும், மின்சாரத்துறை அமைச்சரும்.
இப்படி ஏராளமான திட்டங்களைச் செய்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலினை பற்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல், காலிலே விழுந்து கொல்லைப்புறமாக ஆட்சியை நடத்திய எடப்பாடி பழனிச்சாமி பேசத் தகுதி கிடையாது. அதிமுக கட்சி தற்போது கம்பெனி ஆகிவிட்டது. உண்மையான அதிமுக தொண்டர்கள் அந்த சாதிக்கட்சியை ஒழிக்க வேண்டும். மதவாதக் கட்சியை ஒழிக்க வேண்டும். விரைவில் கோவை மாவட்ட அதிமுகவில் இருந்து ஒரு 5 ஆயிரம் பேர் திமுகவில் இணைக்கவுள்ளோம். தொடர்ந்து திமுக ஆட்சி அமைய செயல்படுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.