2023ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர், ஆளுநர் ரவி உரையுடன் 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் கூட்டத் தொடரில் ஆளுநர் படிக்கும்போது, தமிழ்நாடு அரசின் உரையில் குறிப்பிடப்பட்டிருந்த திராவிட மாடல், பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட வரிகளைப் புறக்கணித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநரின் பேச்சுகள் அவைக் குறிப்பில் இடம்பெறக்கூடாது எனத் தீர்மானம் கொண்டு வந்தார்.
அந்தத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதனால் கோபமடைந்த ஆளுநர், சட்டமன்றத்திலிருந்து வெளியேறினார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில், கூட்டத் தொடரில் நான்காவது நாளான இன்று., மத்திய அரசு சேது சமுத்திர திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்திருக்கிறார்.
இது குறித்துப் பேசிய அவர், “2004ம் ஆண்டு ஒன்றிய அளவில் காங்கிரஸ் ஆட்சி மாறி திமுக கூட்டணி ஆட்சி வந்த பிறகு ரூ. 247 கோடி நிதி ஒதுக்கப்பட்டு திட்டப்பணிகள் 50 சதவீதம் முடிந்த நிலையில், அரசியல் காரணங்களுக்காக பாஜக இத்திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டது. இத்திட்டத்தை ஆரம்பம் முதல் ஆதரித்து வந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, திடீரென நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு திட்டத்திற்கு எதிராக வழக்கு போட்டார். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் துறைமுகங்கள் வளர்ச்சி அடையும். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சேது சமுத்திர திட்டம் உகந்ததாக இருக்கும். எனவே அண்ணாவின் கனவுத் திட்டம் சேது சமுத்திரத் திட்டத்திற்கான தீர்மானத்தை முன்மொழிகிறேன்" என்றார்.