நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.
இதனையொட்டி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக இன்று (12.04.2024) காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. தமிழ்நாடு வருகிறார். ராகுல் காந்தியின் பயணத்திட்டத்தின் படி டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருநெல்வேலிக்கு வருகிறார். அங்குள்ள பெல் மைதானத்தில் 4 மணிக்கு நடைபெறும் பொதுக் கூட்டதில் கலந்துகொண்டு ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொள்கிறார். இந்த கூட்டத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் மதுரை ஆகிய தொகுதிகளில் இந்தியா கூட்டணி கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்தும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளரையும் ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து கோவை செல்கிறார். கோயம்புத்தூரில் இரவு 7 மணியளவில் செட்டிபாளையம் எல் அண்ட் டி பை - பாஸ் அருகில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் ராகுல் காந்தியும் பங்கேற்க உள்ளார். அங்கு இருவரும் கூட்டாக இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஒரே மேடையில் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். இந்தக் கூட்டத்தில் 2 பேர் அமரும் வகையில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.