இன்னைக்கு யாரோ தமிழ்நாடுன்னு சொல்லக்கூடாதுன்னு புலம்பிகிட்டு இருக்கானே.. நான் கேக்குறேன்.. சரி.. அதுக்கு மேல விளம்பரம் கொடுக்க வேண்டாம்.. என அனல் தெறிக்க பேசிய தமிழ்நாடு முதல்வரின் பேச்சை ‘பிலீவர்’ அடி எனக் கொண்டாடி வருகின்றனர் திமுக உடன்பிறப்புகள்.
திமுக இளைஞரணியின் முரசொலி பாசறை மற்றும் திராவிட மாடல் பயிற்சிப்பாசறை-2 இன் தொடக்கவிழா திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் திமுகவின் அத்தனை முக்கியப் பிரமுகர்களும் திமுக ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். உரையைத் தொடங்கியதில் இருந்து முடியும் வரை அனல் தெறித்தது முதல்வரின் உரை. அளவுக்கு மீறிய உற்சாகத்துடன் காணப்பட்ட திமுக தொண்டர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் நாற்காலியை விட்டு எழுந்து நின்று விசில் அடித்து கைகளைத் தூக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இப்படித் தொடங்கியது முதல்வர் உரை..
தமிழக.... மன்னிக்கணும் தமிழ்நாட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அவர்களே.. இதைக் கேட்டதும் உற்சாகமான உடன்பிறப்புகளின் கரகோஷமும் கைத்தட்டலும் அடங்கவே பல நிமிடங்கள் ஆனது. முதல்வர் பேசத் தொடங்கினார்.. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை பற்றி பேசிய முதலமைச்சர், என்னை ஏன் கடந்த மூன்று ஆண்டுகளாக நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை எனக் கிண்டலாகக் கேள்வி எழுப்பினார். மேலும், அந்த ஒரு செங்கல் உதயநிதியின் அடையாளமாக மாறிப்போனதாகக் கூறிப் பாராட்டினார். அத்துடன், நான் ஒவ்வொரு நாளும் உதயநிதிய வாட்ச் பண்ணிட்டு இருக்குறேன்.. என மென்மையான மொழியில் எச்சரிக்கையும் செய்தார். இப்படி நெகிழ்ச்சியும் கண்டிப்பும் மகிழ்ச்சியும் பொங்கிக் கொண்டிருந்த திமுக விழாவில், சமீபத்திய சர்ச்சைகளுக்கு வலுவான பதிலடிகளை முதல்வர் கொடுக்கத் தொடங்கினார்.
அப்போது, அறிஞர் அண்ணாவின் நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட முதல்வர்.. தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய விழாவில் அண்ணாவின் பேச்சை மேற்கோள் காட்டினார். முதல்வர் பேசியது: கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற அந்த நிகழ்வில் அண்ணா பேசும்போது, “என்னை இந்த நிகழ்வுக்கு போகக்கூடாது என என் குடும்பத்தினர் தடுத்தார்கள்.. கட்சியின் முன்னோடிகள் போகக்கூடாது எனக் கட்டாயப்படுத்தினார்கள்.. மருத்துவர்கள் போகவே கூடாது என்று அறிவுறுத்தினார்கள்.. அத்தனையும் மீறி இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்திருக்கிறேன்.. ஏன் தெரியுமா? தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடுன்னு பெயர் கிடைக்கிறப்போ.. இந்த பெயர் சூட்டும் விழாவில் கலந்துகொள்ளவில்லை எனச் சொன்னால் இந்த உயிர் இருந்து என்ன பயன்.. இப்படிச் சொன்னவர் அறிஞர் அண்ணா!
இன்னைக்கு யாரோ தமிழ்நாடுன்னு சொல்லக்கூடாதுன்னு புலம்பிகிட்டு இருக்கானே.. நான் கேக்குறேன்.. சரி.. அதுக்கு மேல விளம்பரம் கொடுக்க வேண்டாம்.. இப்படி முதல்வர் பேசியதைக் கேட்ட திமுகவினர் சேரை விட்டு எழுந்து நின்று விசில் அடித்து தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர். இந்த வீடியோவை பிலீவர் அடி என சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.