தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும், நேரமில்லா நேரத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது" என்று ஆரம்பித்து, பெண் காவலர் ஒருவருக்கு ஏற்பட்ட பாலியல் விவகாரம் உள்ளிட்ட சம்பவங்களைச் சுட்டிக்காட்டிக் கடுமையாகப் பேசத் தொடங்கினார்.
அப்போது எழுந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், "செய்தித்தாள்களில் வந்த செய்திகளை வைத்து எதிர்க்கட்சி தலைவர் பேசுகிறார். இப்படி அவர் பேசக்கூடாது. ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே பேச வேண்டும். அனுமதி பெறாத விசயங்களைப் பற்றி பேசுவது மரபு அல்ல. சட்டம் ஒழுங்கு குறித்துப் பேசினால், அதிமுக ஆட்சியில் சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் குறித்தும் ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. அந்தப் பட்டியலை வெளியிட எங்களையும் அனுமதிக்க வேண்டும். அவரை பேச அனுமதியுங்கள். நான் ஓடப்போவதில்லை; அவரை பேச அனுமதியுங்கள்" என்று சபாநாயகரிடம் வலியுறுத்தினார். ஆனாலும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிக்கு தொடர்ந்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், “எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு உரிய விளக்கத்தை நான் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். ஓடி ஒளியக் கூடாது. இருந்து கேட்டிருக்கணும். குற்றச்சாட்டை சொல்லிட்டு, பதிலை இருந்து கேட்க வேண்டும். இதனால் தான் சொன்னேன். நான் ஓடி ஒளியமாட்டேன் எனக் கூறினேன். பதில் சொல்லுவதற்கு தயாராக இருக்கிறேன் என்றும் சொன்னேன்.
31-12-2022 அன்று இரவு 10.45 மணிக்கு பெண் காவலர் R-5 விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்த உடனே எஃப்.ஐ.ஆர் போடப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 353, 354 மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 4ன் கீழும் பதிவு செய்யப்பட்ட அந்த வழக்கு புலன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்த காவலர்கள் மற்றும் சாட்சியங்களை விசாரணை செய்து சிசிடிவி காட்சிகளும் கைப்பற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து அச்சம்பவத்தில் ஈடுபட்ட பிரவீன்குமார், ஏகாம்பரம் ஆகியோர் 03-01-2023 அன்று கைது செய்யப்பட்டு அடுத்த நாளே நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
புகார் கொடுத்த அன்றே எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து புலன் விசாரணை செய்து 72 மணி நேரத்தில் கைது செய்து எந்த வழக்கிலாவது அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுத்ததுண்டா என்ற கேள்வியைத் தான் நான் கேட்கின்றேன். எஸ்.பி அந்தஸ்தில் உள்ள இரு பெண் காவல் அதிகாரிகளை அலைக்கழித்த ஆட்சிதான் அதிமுக ஆட்சி. ஆகவே இந்த அரசைப் பொறுத்தவரை பெண்களுக்கு எதிராக; பெண்காவலர்களுக்கு எதிராக குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறினார்.