தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி தமிழகம் முழுக்க ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. மேலும், பதிவான வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுமென இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டிவருகின்றனர். அதேபோல் ஒரு கட்சியின் வேட்பாளர் தமது எதிர்க்கட்சியின் வேட்பாளர் மீது குற்றச்சாட்டுகளையும் அடுக்கிவருகின்றனர்.
அந்த வகையில் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஏழாயிரம்பண்ணையில் நேற்று (17.03.2021) அமமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், சாத்தூர் அமமுக வேட்பாளர் ராஜவர்மன் எம்எல்ஏ தலைமை வகித்து பேசினார். அப்போது அவர், “தமிழ்நாட்டில், அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி ரூ. 2 லட்சம் கோடியை உள்ளாட்சித் துறையில் ஊழல் செய்து சம்பாதித்துள்ளார். அவரால் மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை. அமைச்சர் வேலுமணியால் அதிமுக ஆட்சியை இழக்கப் போகிறது.
என்னுடைய சொத்து மதிப்பை ஆய்வு செய்து பாருங்கள். அதிக சொத்து வைத்திருந்தால் அத்தனை சொத்துக்களையும் எழுதி தருகிறேன். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவருக்குமே கட்சி மற்றும் ஆட்சியை அமைப்பதற்கு தகுதி இல்லை” என்றார்.