தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக கூட்டணியில் அங்கம் வகுக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் தொகுதியின் வேட்பாளருமான பேராசிரியர் ஜவாஹிருல்லா, “தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு கடந்த ஏப்ரல் 6, 2021 அன்று நடைபெற்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்று போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதை வெறும் வாக்களிப்பு என்று மட்டும் கருதாமல், தமிழக மண்ணின் தன்மானத்தையும், தனித்தன்மையையும் பாதுகாத்திட தரப்பட்ட மாபெரும் பங்களிப்பு என்றும் கருதி நன்றி நவில்கிறேன். தமிழ்நாடு முழுவதும் திமுக தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அல்லும் பகலும் அயராமல் சுற்றிச் சுழன்று நெஞ்சுறுதியுடன் களப்பணியாற்றிய மனிதநேய மக்கள் கட்சியின் தொண்டர்களுக்கும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் உறவுகளுக்கும் எனது உள்ளம் கனிந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.
ம.ம.க. போட்டியிட்ட பாபநாசம் மற்றும் மணப்பாறை தொகுதிகளில் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் களப்பணியாற்றிய திமுகவின் நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகளுடைய நிர்வாகிகளின் கண் துஞ்சாக் களப்பணிகளுக்கும் கனிவான நன்றி. பாபநாசம் தொகுதியில் போட்டியிட்ட நான், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தேர்தல் பரப்புரையில் ஒருவார காலம் மருத்துவமனையில் இருக்கும் நிலை ஏற்பட்டது. இந்த இக்கட்டான சூழலில், நான் நேரடியாகப் பரப்புரையில் இல்லாத சூழலில், தொகுதி முழுவதும் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத அளவிற்கு களப்பணியாற்றிய திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்களுக்கும் நன்றி என்ற ஒற்றை வார்த்தை ஈடாகாது. அவர்களது உழைப்பிற்கு என்றென்றும் நான் கடன்பட்டுள்ளேன். கரோனா அச்சுறுத்தலையும் மீறி வாக்களித்த தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு மீண்டும் மீண்டும் நெஞ்சார்ந்த நன்றி. மீளட்டும் தமிழகம். இனி ஆளட்டும் சமூக நீதி” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.