ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு அதிமுக, திமுக, நாம் தமிழர், தேமுதிக, சுயேச்சைகள் என தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்காக பிரச்சாரம் மேற்கொள்ள பெருந்துறை சாலையில் அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே அதிமுக தேர்தல் பணிமனை திறக்கப்பட்டுள்ளது. பணிமனை அமைத்த போது அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி என்றும், அடுத்து திறப்பு விழா நடந்தபோது தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்றும் பேனர் வைத்தனர். அன்று மாலையே மூன்றாவதாக தேசிய ஜனநாயக கூட்டணி என்று பெயரை மாற்றி பேனர் வைத்தனர்.
அடுத்த நாள் காலையில் அதையும் அகற்றிவிட்டு அஇஅதிமுக கூட்டணி வேட்பாளர் என நான்காவதாக பேனரை மாற்றினார்கள். இந்த நான்கு பேனர்களிலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் பெரிய படங்களும், கூட்டணிக் கட்சி என்ற முறையில் த.மா.கா. ஜி.கே. வாசன், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி ஆகியோரின் சிறிய படங்களும் இடம் பெற்றிருந்தன. இந்த நிலையில் மீண்டும் 5வது முறையாக புதிதாக பேனரை மாற்றி வைத்துள்ளனர். அதில் அஇஅதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சியின் வெற்றி வேட்பாளர் என மாற்றி பிரதமர் மோடியின் பெரிய படம், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் சிறிய படமும் மற்ற கூட்டணிக் கட்சி தலைவர்களின் படமும் இணைக்கப்பட்டுள்ளன.