முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக திருவாரூர் செல்ல இருக்கிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கட்சிகளின் தலைவர்கள் ஈரோட்டை முற்றுகையிட்டு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கில் போட்டியிடும் திமுக கூட்டணியான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 24 ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
இதனிடையே, 2 நாள் பயணமாக நாளை திருவாரூர் மாவட்டத்திற்கு முதலமைச்சர் செல்ல இருக்கிறார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெற இருக்கும் திமுக நிர்வாகியின் இல்லத்திருமண விழாவினை தலைமையேற்று நடத்த இருக்கிறார். இதற்காக அவர் நாளை காலை 11.15 மணியளவில் விமானம் மூலம் திருச்சிக்கு செல்கிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு சாலை மார்க்கமாக திருவாரூருக்கு வருகிறார்.
22 ஆம் தேதி திருமணம் முடிந்த பின் திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கட்டப்பட்டு வரும் கலைஞர் அருங்காட்சியகம், மணிமண்டபம் அமைக்கும் பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார். திருவாரூர் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதை முன்னிட்டு ஐ.ஜி. கார்த்திகேயன் மேற்பார்வையில் டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
முதலமைச்சரின் வருகையை ஒட்டி திருவாரூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்களும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.