அரசுப் பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று, முன்னணி உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கல்விச் செலவை முழுமையாகத் தமிழக அரசே ஏற்கும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், “அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று, நம் நாட்டில் செயல்பட்டு வரும் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அனைத்து மாணவர்களின் கல்விச் செலவினை அரசே ஏற்றுக்கொள்ளும்.
மேலும், அயல்நாட்டு உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி உதவித் தொகை பெற்றுச் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் அக்கல்வி நிறுவனத்தில் சேர்வதற்காகச் செல்லும் முதல் பயணத் தொகை முழுவதையும் இவ்வரசே ஏற்றுக்கொள்ளும். இதற்கென ஆண்டுதோறும் ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நமது அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக்காக மற்றுமொரு மகத்தான அரசாணையை இன்று வெளியிட்டுள்ளார்.
நம் தமிழ்நாட்டு மாணவர்களை உலகம் போற்றும் அறிஞர்களாக உருவாக்க, இந்தியாவிற்கே முன்மாதிரியான பல புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மாணவர்கள், ஆசிரியப் பெருமக்கள் மற்றும் பெற்றோர்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.