Skip to main content

கட் அவுட், பேனர் எங்கும் இருக்கக்கூடாது; அமைச்சர் நாசருக்கு கண்டிஷன் போட்ட முதல்வர்

Published on 18/12/2022 | Edited on 18/12/2022

 

Chief Minister Stalin's speech at Minister Nasser's family function

 

எங்கே, என்ன தப்பு நடக்கும் எனச் சில பத்திரிகைகள் காத்திருக்கின்றன. தும்மினால் கூட அதை வைத்து விமர்சனம் செய்துவிடுவார்கள் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் நாசர் அவர்களின் இல்லத் திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். விழாவில் பேசிய முதல்வர், “அமைச்சர் நாசரை நேற்றுதான் இளைஞராகப் பார்த்தது போல நினைவிற்கு வருகிறது. நாசர் அமைச்சராக இருக்கிறார் என்றால், சாதாரணமாக அவருக்கு இந்தப் பொறுப்பு கிடைத்துவிடவில்லை. திமுகவின் கொடியை தமிழகம் முழுவதும் அதிகம் ஏற்றியவர் கலைஞர். அதன்பின் அவருக்கு இணையாக ஏற்றியது நான்தான்.

 

நான் இளைஞரணி செயலாளராக தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது எனக்குத் துணையாக மூன்று பேர் வருவார்கள். நாகையைச் சேர்ந்த அசோகன் மற்றும் நாசர், சிங்காரம் ஆகியோர்தான் உடன் வருவார்கள். கட்சியின் சார்பில் மாநாடுகள் நடத்துவதாக இருந்தால், அந்த நிகழ்ச்சிக்கு முன்னால் ஊர்வலம் நடத்துவோம். ஆனால், இளைஞரணி துவங்கியதன் பிறகு அதை முறைப்படுத்தி பேரணியாக மாற்றினோம். அதன்பின் இளைஞரணிக்கு ராணுவ ஒழுங்குடன் கூடிய பயிற்சி அளிக்க வேண்டும் என முடிவு செய்தோம். அந்தப் பயிற்சியை நாசர்தான் முன்னின்று அளித்தார். 

 

நாம் தேதி கொடுத்துவிட்டோம். நாசர் திருமணத்தை பிரம்மாண்டமாக செய்துவிடுவாரே. அதனால் விமர்சனம் வருமே என்ற பயம் இருந்தது. நாசராக இருந்து விமர்சனம் வந்தால் பிரச்சனை இல்லை. ஆனால், அமைச்சராக இருக்கும் நாசருக்கு இழுக்கு வந்தால் அது எனக்கு மட்டுமல்ல, இக்கட்சிக்கும் இழுக்கு. எங்கே, என்ன தப்பு நடக்கும் எனச் சில பத்திரிகைகள் காத்திருக்கின்றன. தும்மினால் போதும். அதைக் கண்டுபிடித்து புகைப்படம் எடுத்து விமர்சனம் செய்து வெளியிடக்கூடிய ஊடகங்கள் எல்லாம் இருக்கிறது.

 

அதனால் அவரிடம் ஆடம்பரமின்றி அமைதியாக திருமணம் இருக்கவேண்டும் என்றும் கட்சிக்கொடியை எவ்வளவு வேண்டுமானாலும் கட்டுங்கள். அதற்கு கட்டுப்பாடு சொல்லவில்லை. கட்அவுட், பேனர்கள் இருக்கக்கூடாது. அதே சமயத்தில், கட்சிக்கு வலுசேர்க்கும் வகையில் திருமணம் இருக்க வேண்டும் எனக் கூறினேன். இன்று அதை நிறைவேற்றியுள்ளார்.” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்