சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று துவங்கி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் மறைவு குறித்து இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. மேலும் முலாயம் சிங் யாதவ் உட்பட 7 தலைவர்களின் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இன்றைய அலுவல்கள் நிறைவு பெற்றதை அடுத்து சபாநாயகர் அப்பாவு நாளை காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தை ஒத்திவைத்தார்.
மேலும் எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கை பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை புறக்கணித்துள்ளனர். இதற்கு எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கை பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கியது ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இன்று அதிமுக பொன்விழா நிகழ்வில் கலந்துகொண்ட பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். சபாநாயகரை பொறுத்தவரை எண்ணிக்கையின் அடிப்படையில்தான் செயல்பட முடியும். அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் 62 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். ஜனநாயக மாண்புடைய மற்றும் விதியை மதிக்கின்ற சபாநாயகராக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக அந்தக் கடிதத்திற்கு மதிப்பளித்து எங்களுக்கு உரிய உரிமையை நிலைநாட்ட வேண்டும்.
அவரின் நடவடிக்கைகளைப் பொறுத்து கட்சி அதைப் பற்றி ஆலோசித்து முடிவு செய்யும். ஈபிஎஸ் தரப்பு ஓபிஎஸ் தரப்பு என ஊடகங்களில் போடுகிறீர்கள். தயவுசெய்து அப்படி போடாதீர்கள். நான்கு பேரை வைத்துக்கொண்டு இருப்பது கட்சியா? கட்சி என்பது நாங்கள்தான். நாங்கள்தான் அதிமுக.
மத்திய அரசின் கொள்கைகள் மாநிலத்தின் உரிமையை பறிக்கக்கூடியதாக இருந்தால் எந்த வகையிலும் அதிமுக ஏற்றுக்கொள்ளாது. தமிழகத்திற்கு யார் வந்தாலும் தமிழகம் பொருளாதார, சமூக விஷயங்களில் முன்னுக்கு வருகிறதா என்றுதான் பார்க்க வேண்டும். நீங்கள் வரக்கூடாது என்று யாருமே சொல்லக்கூடாது. அமைச்சர்கள் எத்தனை பேர் வேண்டுமானாலும் வரட்டும் அதனால் என்ன பயன். அதன் பயன்கள் போகப் போகத்தான் தெரியும்” எனக் கூறியுள்ளார்.