தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துடன் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று துவங்கியது. இன்றைய கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் மற்றும் துணைத்தலைவர் ஓபிஎஸ் ஆகியோர் பங்கேற்கவில்லை. சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
இதன் பின் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் வருகை தந்து உரையாற்றிய ஆளுநருக்கு அரசின் சார்பில் நன்றி தெரிவிக்கிறோம். ‘கடிகாரம் ஓடும் முன் ஓடு’ என பாரதிதாசன் எழுதினார். அதேபோல்தான் நாங்கள் வேகமாகவும் விவேகமாகவும் செயல்படுகிறோம். நான் என்று சொல்லும்போது அமைச்சரவையை மட்டும் அல்ல. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் உள்ளடக்கி ஒட்டுமொத்தமாகச் சேர்த்து தான் சொல்லுகிறேன்.
ஆட்சிப் பொறுப்பேற்ற பின் மேற்கொண்ட எனது பயணம் குறித்து பின்னோக்கி பார்க்கும்போது எனக்கே மலைப்பாக இருக்கிறது. கடந்த ஓராண்டு காலத்தில் 655 நிகழ்ச்சிகளில் நான் பங்கெடுத்துள்ளேன். அதில் 559 நிகழ்ச்சிகள் அரசு நிகழ்ச்சிகள். இடையில் கொரோனா தொற்று ஏற்பட்டு சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மொத்தமாக சொல்வதாக இருந்தால் கடந்த ஆண்டு 9000 கிலோ மீட்டர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்துள்ளேன்.
நான் என்னை வருத்திக்கொள்ள அலையவில்லை. யாரும் பாராட்ட வேண்டும் என்பதற்காக ஓயாத அலைச்சல்களை உருவாக்கிக் கொள்ளவில்லை. நான் என் இயல்பில்தான் இருக்கிறேன். இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை” எனக் கூறினார்.