சென்னை கலைவாணர் அரங்கத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழா இலச்சினையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். முன்னதாக கலைவாணர் அரங்கத்தில் கலைஞர் குறித்த புகைப்படக் கண்காட்சியையும் முதலமைச்சர் பார்வையிட்டார். உடன் அமைச்சர்கள் இருந்தனர். மேற்கு வங்காள முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தியும் இந்த புகைப்படக் கண்காட்சியில் பங்கேற்றார். இன்று லச்சினை வெளியிடப்பட்டு நாளையில் இருந்து நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது.
நூற்றாண்டு லச்சினையை வெளியிட்ட முதலமைச்சர், “கலைஞரின் நூற்றாண்டு விழாவில் தமிழக அரசு ஓராண்டு காலம் கொண்டாட திட்டமிட்டுள்ளது. என் தலைமையிலான இந்த திராவிட மாடல் அரசையே அவருக்கும் அவரது புகழுக்கும் நான் காணிக்கை ஆக்குகிறேன். நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி என்றால் அது முன்னாள் முதலமைச்சர் கலைஞர் தான். அவர் தொடாத துறைகளே இல்லை. அவர் தொட்டு துலங்காத துறைகளே இல்லை. அவர் போட்டுக்கொடுத்த பாதையில் தான் அனைத்து துறைகளும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. 50 ஆண்டு காலத்தில் தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டவர் அவர். மக்கள் மனங்களில் ஆட்சி செய்கிறார்.
இலக்கியவாதிகளுக்கெல்லாம் இலக்கியவாதியாக, கவிஞருக்கெல்லாம் கவிஞராக, அரசியல் தலைவருக்கெல்லாம் தலைவராக முதலமைச்சருக்கெல்லாம் முதல்வராக திகழ்ந்த கலைஞரின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாட தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அதுகுறித்த லச்சினை வெளியிட்டுள்ளோம்” என்றார்.