‘கள ஆய்வில் முதலமைச்சர்’ என்ற புதிய திட்டம் துவங்க இருப்பதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
“அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளை நாடி வரும் மக்கள் மனநிறைவுடன் திரும்பிச் செல்லும் வகையில் பணியாற்ற வேண்டியது அரசின் அங்கமாக இருக்கும் ஒவ்வொருவரின் கடமை. அதை உறுதிப்படுத்த நான் மேற்கொள்ளும் ஆய்வுகள் தொடரும்” என முதல்வர் ஸ்டாலின் இதற்கு முன்னர் கூறியிருந்தார்.
அந்த வகையில் ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ என்ற புதிய திட்டம் துவங்க இருப்பதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி முதல்வர் இத்திட்டத்தினை அறிமுகப்படுத்தி முதல்வர், முக்கிய அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர் மாவட்டம் தோறும் சென்று நிர்வாகப் பணிகள் வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகள் குறித்து ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர். முதற்கட்டமாக வரும் பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய இரு தினங்கள் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்கள்.
இரண்டு தினங்கள் நடைபெறும் இந்த ஆய்வில் தொழில் அமைப்புகளின் கருத்துகள் விவசாய சங்க பிரதிநிதிகளின் கருத்துகள் மற்றும் மாவட்ட சட்ட ஒழுங்கு நிலை குறித்து முதல்வர் ஆய்வு மேற்கொள்ளுவார்.ஆய்வில் திரட்டப்பட்ட தகவல்கள் குறித்து இரண்டாம் நாளில் முதலமைச்சர் தலைமையில் மாவட்ட ஆட்சியாளர்களுடன் விவாதிக்கப்படும். இந்த ஆய்வுக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர், துறைத் தலைவர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர் பங்கு கொள்வர்.