தமிழ்நாடு தேர்தல் ஆணையம், விடுபட்ட மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிந்துள்ள நிலையில் தேர்தல் பரப்புரையைத் தொடங்க அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. இந்நிலையில் சொல்லாத வாக்குறுதிகளும் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருவதாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சேலம் கருப்பூரில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல் நடத்தினார். அந்தக் கலந்துரையாடலில், மாநில அளவில் கடன் உத்தரவாத திட்டம்; ஏற்றுமதியை மேம்படுத்த 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. 4 சேகோ சர்வ் சேமிப்பு மையங்கள் நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூட்டத்தில் ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும், உணவுப் பூங்கா அமைக்கப் பெரிய சீரகாபாடியில் நிலம் கையகப்படுத்தப்பட்டு முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. தொழில் துறை முன்னேற்றத்திற்கு நல்ல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். பொறுப்பேற்ற கடந்த 4 மாதத்தில் சொன்ன வாக்குறுதிகளை மட்டுமல்லாது சொல்லாத வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டு வருகிறது என முதல்வர் தெரிவித்தார்.