நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவின்போது விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.
இதனையொட்டி அரசியல் கட்சிகளின், தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் தென் சென்னையில் திமுக சார்பில் போட்டியிடும் தமிழச்சி தங்கப்பாண்டியன் மற்றும் மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் ஆகியோரை ஆதரித்து பெசன்ட் நகரில் இன்று (17.04.2024) மாலை 4 மணிக்கு தமிழ்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்கிறார்.
அதே சமயம் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளின் மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்றுடன் (17.04.2024) நிறைவு பெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.