இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி இமாச்சலப்பிரதேசத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது, இந்த நடைபயணத்தை கன்னியாகுமரியில் இருந்து தொடங்கியதற்கான காரணத்தைத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்கிற பெயரில் இந்தியா முழுவதும் 12 மாநிலங்களில் 3,570 கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து உரையாடி வருகிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி அசைத்து இந்த நடைபயணத்தை தொடங்கி வைத்தார். இந்தியாவின் இறையாண்மையும் அரசியலமைப்புச் சட்டமும் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்தப் பயணத்தை 150 நாட்களுக்கு மேற்கொள்ளும் ராகுல் காந்தியின் இந்தப் பயணமானது தற்போது 124வது நாளை எட்டியுள்ளது.
இந்த இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் போது இமாச்சலப்பிரதேசத்தில் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியின் போது, "இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்குவதற்கு முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்றத்தில் சில விவகாரங்களை எழுப்ப முயன்றோம். ஆனால், பாஜகவினர் எங்களை அனுமதிக்கவில்லை. இந்தியாவின் நீதித்துறை மற்றும் ஊடகம் போன்ற எந்த ஒரு அமைப்பின் வழியாகவும் எங்களால் இதுகுறித்த விவகாரங்களை எழுப்ப முடியவில்லை. நீதித்துறை மற்றும் ஊடகம் போன்ற அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளால் நெருக்கடியைச் சந்திக்கின்றன. அதனால் தான் காங்கிரஸ் கட்சி சார்பில் கன்னியாகுமரியில் இருந்து இந்த நடைபயணத்தைத் தொடங்கி நடத்தி வருகிறோம்" என்று கூறினார்.