அரசியல் தலைவர்கள், தங்கள் கட்சியின் தேர்தல் வெற்றிக்காக தேர்தல் வியூகம் வகுப்பாளர்களுடன் ஒப்பந்தம் போட்டுக்கொள்வது அண்மைக் காலமாக அதிகரித்திருக்கிறது. அந்த வகையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் ப்ராண்டிங் வல்லுநர்களுடன் ஒப்பந்தம் போட்டுக்கொள்ள தயாராகி விட்டார்.
இதனைத் தொடர்ந்து, தேர்தல் ப்ராண்டிங் நிறுவனமான ஜே.பி.ஜி. நிறுவனத்தின் ஜான் ஆரோக்கியசாமியை அண்மையில் நேரில் அழைத்து விவாதித்துள்ளார் சந்திரபாபு நாயுடு. தமிழகத்தைச் சேர்ந்தவரான ஜான் ஆரோக்கியசாமி, பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி ப்ளேயரின் அரசியல் ஆலோசகர் மற்றும் வியூகம் வகுப்பாளராக இருந்த ப்ரிட்டனின் ப்ராண்டிங் வல்லுநர் டோனிகுட் என்பவரின் குட் கன்சல்டன்சியில் பணியாற்றியவர்.
அரசியல் தலைவர்களுக்கான தலைமைத்துவத்தை பிரபலப்படுத்துவதில் வல்லவரான ஜான் ஆரோகியசாமி, இதற்கு முன்பு பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி, கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா , மகாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ்தாக்கரே, பீஹார் முதல்வர் நிதிஷ்குமார், ஆகியோரின் லீடர்ஷிப் ப்ராண்டிங் நிபுனராக செயலாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் பீகாரில் நடந்து முடிந்த தேர்தலில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு மைக்ரோ வியூக தேர்தல் பணிகளை மேற்கொண்டவர் ஜான்.
ஆந்திராவில் கடந்த தேர்தலில் கடும் தோல்வியை சந்தித்த தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவிற்கும் அவரது கட்சிக்கும் பிராண்டிங் பணிகளை செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவிருக்கிறது ஜான் ஆரோக்கியசாமி தலைமையிலான குழு. இதற்காக கடந்த இரு வாரங்களுக்கு முன்பு நடந்துள்ள பேச்சுவார்த்தைகளின்படி, 2021ஆம் ஆண்டிலிருந்தே இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவிருப்பதாக தெரிகிறது.