அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் போதை கலாச்சாரம் பெருகிவிட்டது. இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்பது தான் உண்மை. தமிழகத்தில் தமிழ் தான் தாய்மொழி. தாய்மொழிக் கல்வி அவசியம் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. தமிழக மக்கள் எந்த மொழியையும் விரும்பி ஏற்றுக்கொள்வார்களே தவிரத் திணிப்பை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எப்படி இந்தியைத் திணிப்பார்கள். 65-க்குப் பின் காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சிக்கு வராமல் போனதற்கு காரணம் இந்தி திணிப்புதான். எனவே மத்திய அரசு இது போன்ற விபரீத முயற்சியில் ஈடுபடாது.
செய்தியாளர்கள் எங்களை மடக்க வேண்டும் என்று தான் கேள்விகளைக் கேட்பீர்கள். கிரிக்கெட்டில் சிக்ஸர் அடிக்க வேண்டும் என்றா பந்து வீசுவார்கள். அண்ணாமலை இப்பொழுது தானே அரசியலுக்கு வந்துள்ளார். போகப் போக நிதானமாகி விடுவார். அண்ணாமலை தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர். கட்சியின் தலைமையும் அவரைக் கவனித்துக் கொண்டு தான் இருக்கும். அதிகமான விஷயங்களைச் சரியாக எடுத்துச் சொல்கிறார். மக்களின் மனதில் இருக்கும் கேள்விகளைத் தான் ஊடகத்தில் இருப்பவர்கள் கேட்கிறார்கள். அதற்குப் பொறுமையாகப் பதில்களைச் சொல்ல வேண்டும்.
அதிமுகவில் இதற்கு முன் யார் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையும் சேர்த்து வைத்தார்களோ, அவர்கள் மனது வைத்தால் தான், அவர்கள் இருவரும் சேருவார்கள்” எனக் கூறினார்.