மத்திய உளவுத்துறையினர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். அதன்படி உளவுத்துறை மத்திய உள்துறைக்கு அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்துள்ளது. அதில், அண்ணாமலையின் பாதுகாப்பினை அதிகரிக்க வேண்டும் என்றும் அவருக்கு z பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.
அதன்படி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அண்ணாமலைக்கு ஏற்கனவே Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் 33-க்கும் அதிகமான கமாண்டோக்கள் சுழற்சி முறையில் அண்ணாமலைக்கு பாதுகாப்பு அளிப்பார்கள் என்றும், அண்ணாமலையின் வீடு மற்றும் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் அவருக்கு 24 மணி நேரமும் கமாண்டோ வீர்ரகள் பாதுகாப்பு அளிப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, குண்டு துளைக்காத வாகனமும் அண்ணாமலைக்கு வழங்கப்படும்.
வெளியில் இருந்து அண்ணாமலைக்கு கொலைமிரட்டல் வந்ததால் Z பிரிவு பாதுகாப்பினை வழங்கி இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் இந்தப் பாதுகாப்புப் பிரிவுகள் வருவதால் அண்ணாமலையின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு அவருக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்காக பாதுகாப்பு அதிகாரிகள் திருநெல்வேலியில் உள்ள அண்ணாமலையிடம் ஒப்புதலை வாங்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.