Skip to main content

கலைஞரின் குருகுலத்தில் வீதிகள் தோறும் புகழஞ்சலி.... 

Published on 07/08/2020 | Edited on 07/08/2020

 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் தமிழகத்தின் முன்னாள் முதல்வராகவும் இருந்த கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் இன்று தமிழகம் முழுக்க தி.மு.க.வினரால் நடத்தப்படுகிறது. சென்னையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் முதன்மை நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் மெரினா கடற்கரையில் உள்ள கலைஞரின் நினைவிடத்திற்குச் சென்று அவரது நினைவிடத்தில் புகழ் மாலை அணிவித்தனர். அதேபோல் தான் தமிழகம் முழுக்க அனைத்து ஊர்களிலும் கலைஞரின் சிலைகள் மற்றும் திருவுருவப் படங்களுக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

 

கலைஞர் தொடக்கக் காலத்தில் திராவிட இயக்கக் கொள்கைகளைப் பின்பற்றிய போது தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரோடு ஈரோட்டில் சில காலம் வாழ்ந்தார். தன் வாழ்நாள் முழுக்க ஈரோடு நகரத்தை எனது குருகுலம் என பெருமை பொங்க கூறுவார் கலைஞர். அப்படிப் புகழ் பெற்ற குருகுலமான ஈரோட்டில் கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி திரும்பிய திசையெல்லாம் நிகழ்ந்தது. 

 

தி.மு.க.வினர் தங்கள் இல்லங்களுக்கு முன்பு கலைஞரின் புகைப்படங்களை வைத்து மாலை அணிவித்தனர். அதே போல் ஒவ்வொரு வீதியின் முகப்பிலும் பெரிய படங்கள் வைக்கப்பட்டு மாலை சூடப்பட்டது. அங்கு பூக்களும் வைக்கப்பட்டிருந்தது. கட்சிக்கு சம்பந்தமில்லாத பொதுமக்கள், இளைஞர்கள், இளம் பெண்கள், வயதான பெண்கள் எனப் பலரும் கலைஞர் படத்திற்கு பூக்கள் தூவி சிலர் கண்ணீர் சிந்தியது உணர்ச்சிகரமாக இருந்தது. 

 

வாழ்க்கையில் எந்த நம்பிக்கையும் இல்லாது இருந்தபோது கடவுள் போல முதியோர் உதவித் தொகை நீங்கதானே ஐயா கொடுத்தீங்க என ஒரு வயதான பாட்டி வாய் விட்டு கூறி அழுததும், இன்று நான் அரசுப் பணியில் இருப்பதற்கு நீங்கள் வழங்கிய மூன்று சதவீதம் உள்ஒதுக்கீடு தாங்க ஐயா, எங்களுக்கு நீங்க தான்யா கடவுள் என ஒரு தலித் பெண் கண் கலங்கிய நிகழ்வுகள் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. 

 

ஈரோடு கருங்கல்பாளையத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த வக்கீல் ரமேஷ்குமார் முப்பது இடங்களில் கலைஞரின் படங்கள் வைத்து மலர் மாலை சூடியதோடு அப்பகுதி மக்களுக்கு கபசுர சித்த மருந்தும் நோய் எதிர்ப்பு சக்தி சித்த மருத்துவ மாத்திரைகளும் வழங்கினார்.

 

http://onelink.to/nknapp

 

தி.மு.க. தெற்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சு.முத்துச்சாமி தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர்கள் ஆ.செந்தில்குமார், செல்லப் பொன்னி மனோகரன், பொருளாள் ப.க.பழனிசாமி முன்னாள் மேயர் குமார் முருகேஷ் கவிஞர் ஈரோடு இறைவன் உட்பட நிர்வாகிகள் தொண்டர்கள் ஈரோடு முனிசிபல் காலனி மற்றும் வ.ஊ.சி. பூங்காவில் உள்ள கலைஞரின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் அதே போல் அங்கு இருந்த தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா சிலைகளுக்கும் மாலை அணிவித்தனர். தொடர்ந்து தந்தை பெரியார் பிறந்து வளர்ந்த வீடான பெரியார், அண்ணா நினைவகத்திற்குச் சென்று மூன்று தலைவர்களின் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினார்கள்.

 

ஈரோடு மாவட்டத்தில் குக்கிராமம் முதல்கொண்டு வீதிகளில் கலைஞரின் புகைப்படங்கள் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட காட்சிகள் மக்கள் மனதில் கலைஞர் நீங்காத இடம்பெற்றுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்