2014, டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் வகையில் மத்திய அரசு புதிய சட்ட திருத்தத்தை கொண்டுவந்தது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தான் மக்களை தவறாக வழிநடத்துகிறது என பாஜக சார்பில் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த சட்டம் மாநிலங்களவையில் நிறைவேற முக்கிய காரணமாக இருந்தது அதிமுகவின் வாக்குகள் தான் என்று அனைத்து எதிர்கட்சியினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் குடியுரிமை சட்ட திருத்தத்தை தமிழகத்தில் அதிமுக அனுமதிக்கக் கூடாது என்று அதிமுக சிறுபான்மை பிரிவு சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறுகின்றனர். இது குறித்து அன்வர் ராஜா பேசும் போது, குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு அதிமுக ஆதரவாக செயல்பட்டதால் தமிழகத்தில் உள்ள சிறுபான்மை மக்களின் வாக்குகளை அதிமுக இழந்து வருகிறது. இது அதிமுகவுக்கு பெரிய இழப்பாகும். பல்வேறு மாநிலங்கள் இந்த குடியுரிமை மசோதாவை அமல்படுத்த மாட்டோம் என்று கூறிவிட்டன. இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் நாட்டின் இறையாண்மை மற்றும் மதசார்பின்மைக்கு பாதிப்பு வந்துவிடும். எனவே அதிமுக மத்திய அரசின் இந்த சட்டத்தை எதிர்த்தால் தற்போது நடந்து வரும் போராட்ட எதிர்ப்பு என்ற நெருப்பை அணைக்கும் தண்ணீர் போல மக்களின் மனதில் அதிமுக நீங்கா இடம்பெறும் என்றும் கூறியுள்ளார். குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரித்து அதிமுக செயல்பட்டுவருவதால் தமிழகத்தில் உள்ள சிறுபான்மை மக்களின் ஆதரவு முற்றிலும் இழந்து வருவது என்பது குறிப்படத்தக்கது.