சட்டமன்ற குழுவை மாற்றியமைக்கும்படி கடிதம் வந்தால் அதனை நிராகரிக்க வேண்டும் என சபாநாயகருக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நேற்று நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். மேலும், ஓபிஎஸ் மற்றும் வைத்திலிங்கம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். ஓபிஎஸ் வசமிருந்த பொருளாளர் பதவியானது திண்டுக்கல் சீனிவாசனுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு முன்னதாக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமையக கதவை உடைத்து உள்ளே நுழைந்தார்.
இந்த நிகழ்வின்போது ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், இரு தரப்பினரும் மாறிமாறி தாக்கிக்கொண்டனர். இதையடுத்து, வருவாய் துறையினர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்
இந்த நிலையில், பொதுக்குழு தொடர்பாக நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் சட்டமன்ற குழுவை மாற்றியமைக்க கோரி மனுக்கள் வந்தால் அவற்றை நிரகாரிக்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் ஓ. பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.