தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்திரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். கடந்தாண்டு செப்டம்பர் 1- ஆம் தேதியில் இருந்து பாஜக தலைவர் பதவி காலியாக இருந்த நிலையில், எல்.முருகனை நியமித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக பதவி வகித்து வரும் எல்.முருகன் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். சுமார் 15 வருடம் வழக்கறிஞர் பணியில் அனுபவம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த எல்.முருகன், என் மீது நம்பிக்கை வைத்து பதவி தந்துள்ளார்கள்; அதற்கேற்றவாறு செயல்படுவேன் என்றார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கு நன்றி தெரிவித்தார்.
![bjp](http://image.nakkheeran.in/cdn/farfuture/-Bj6iPOTHK2RJnHM-DBuM1UIuavnqaT9TNYgOguLsdk/1584703790/sites/default/files/inline-images/784.jpg)
மாநில தலைவர் திரு.L.முருகன் அவர்கள் எனது இல்லத்திற்கு வந்திருந்தார். கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து கலந்தாலோசித்தோம். pic.twitter.com/9WqgYGGEF5
— H Raja (@HRajaBJP) March 20, 2020
இந்த நிலையில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவை அவரது இல்லத்திற்கு சென்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சந்தித்துப் பேசியுள்ளார். இது குறித்து விசாரித்த போது, தமிழக பாஜக தலைவர் பதவிக்கு சீனியர்கள் பலர் முயற்சி செய்து வந்தனர். அதில் முக்கியமாக எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், முருகானந்தம், ராகவன் ஆகியோர் போட்டியில் இருந்தனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக பாஜக தலைமை எல்.முருகனை தமிழக பாஜக தலைவராக நியமனம் செய்தனர். இதனால் தமிழக பாஜகவில் உள்ள சீனியர்கள் கடும் அதிருப்தியில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக தமிழக பாஜக தலைவர் பதவியை எதிர்பார்த்த எச்.ராஜா கடும் ஏமாற்றம் அடைந்ததாகச் சொல்லப்பட்ட நிலையில், அவரது வீட்டிற்கே சென்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு குறித்து எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், மாநில தலைவர் திரு.L.முருகன் அவர்கள் எனது இல்லத்திற்கு வந்திருந்தார். கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து கலந்தாலோசித்தோம் என்று குறிப்பிட்டுள்ளார்.