கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் களம் பரபரப்பாகக் காணப்படுகிறது. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த ஆண்டு 9 மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக பசவராஜ் பொம்மை உள்ளார். அவரது ஆட்சியின் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளது. குறிப்பாக ஹிஜாப் விவகாரம், சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக மழைநீர் சாலைகளில் வெள்ளம் போல் தேங்கி நின்றது. வடிகால்கள் ஒழுங்காக அமைக்கப்படாததே இந்த நிலைக்கு காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தின. தொடர்ந்து லவ் ஜிகாத் குறித்து கர்நாடக பாஜக தலைவர் பேசிய விவகாரம் என கர்நாடக பாஜக மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இந்நிலையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் 114 வென்று ஆட்சி அமைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 113 இடங்களைப் பிடிக்கும் கட்சி ஆட்சி அமைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாஜகவின் சாதனைகளை விளக்க பாஜக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், பாஜக நிர்வாகிகள் பொதுக்கூட்டங்களைப் போட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதில் கர்நாடக மாநிலத்தின் பாஜக தலைவர் நளின் குமார் பிரச்சார கூட்டங்களில் பேசும் கருத்துகள் சர்ச்சை ஆகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய நளின்குமார், இது அனுமனின் பூமி. திப்புவின் ஆதரவாளர்கள் இங்கு இருக்கக்கூடாது. ராமர் மற்றும் அனுமனை கொண்டாடுபவர்கள் மட்டுமே இங்கு இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதேபோல் பாஜகவை சேர்ந்தவர்கள் சாவர்க்கருக்கு ஆதரவாகவும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் திப்புவிற்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர். இந்நிலையில் மாண்டியாவில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் அஸ்வத் நாராயணா, திப்பு சுல்தானை கொன்றது போல் சித்தராமையாவையும் கொல்ல வேண்டும் என்று பேசியது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரின் இந்தப் பேச்சிற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து வரும் சூழலில் அமைச்சரின் கருத்துக்கான பொருளை சிலர் தவறாகப் புரிந்து கொள்வதாக பாஜகவினர் கூறி வருகின்றனர். இருப்பினும் அமைச்சரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று சித்தராமையா கூறியுள்ளார்.