தமிழக சட்டமன்றத் தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல், தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் ரொம்ப பிசியாக உள்ளன. அதேசமயம், தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மேலும், பணப்பட்டுவாடாவை தடுக்க அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் ம.தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் கவின் நாகராஜ் என்பவரின் வீடு உள்ளிட்ட இடங்களிலும், தி.மு.க.வின் நகரச் செயலாளர் கே.எஸ்.தனசேகர் என்பவரின் வீடு, அலுவலகங்களிலும், லட்சுமி நகரில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளர் சந்திரசேகர் வீடு, அலுவலகங்களிலும் இன்று (17/03/2021) மாலை 05.30 மணி முதல் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இதில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளர் சந்திரசேகர் வீடு உள்ளிட்ட இடங்களில் இருந்து ரூபாய் 8 கோடியை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, "கறுப்புப் பணம் வைத்திருப்பதால்தான் வருமானவரித்துறை சோதனை நடைபெறுகிறது. கறுப்புப் பணம் யார் வைத்திருந்தாலும் அவர்களின் வீட்டிலும் சோதனை நடைபெறும். அமைச்சரவையில் பா.ஜ.க. இடம் பெறுவது குறித்து தேர்தல் முடிவுக்குப் பின் அ.தி.மு.க. முடிவு செய்யும். தமிழகம் ஒன்றும் குடும்பச் சொத்து கிடையாது, இது மக்களின் சொத்து" என்றார்.