பாஜக தேசிய தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா இரண்டு நாள் அரசு முறை பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
அமித்ஷாவை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன், ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன், ஹெச்.ராஜா, சி.டி.ரவி, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
சென்னை விமான நிலையத்திலிருந்து அமித்ஷா, எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலுக்கு செல்லும் வழியில் அதிமுக மற்றும் பாஜக தொண்டர்கள் ஆடல் பாடலுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொண்டர்களின் வரவேற்பை ஏற்கொள்ளும் விதமாகவும், தொண்டர்களை பார்க்கும் விதமாகவும் திடீரென காரில் இருந்து இறங்கி சிறிது தூரம் சாலையில் தொண்டர்களை பார்த்தபடி கை அசைத்து நடந்து சென்றார். இவருடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனும் நடந்து சென்றார்.
சென்னை கலைவாணர் அரங்கில் மாலை 04.00 மணிக்கு நடக்கும் அரசு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார். விழாவில் ரூபாய் 67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு காணொளி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சென்னை வருகையையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.