தமிழ்நாட்டில் ஒவ்வொரு முறையும் ஆட்சி மாறும்போதும், அந்தக் கட்சிக்காரர்கள் தங்களுக்கு சாதகமான சில காரியங்களை செய்துகொள்வது வழக்கம். எல்லா கட்சிகளிலும் இது நடந்துவருகிறது. தற்போது ஆட்சியைப் பிடித்துள்ள திமுக தலைமையிலான அரசின் அமைச்சர்கள், பம்பரமாக சுழன்று மக்களுக்கான பணிகளை முன்னெடுத்துவருகின்றனர்.
இந்நிலையில், அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் உள்ள தன்னுடைய வீட்டுச் சுவரில் நோட்டீஸ் ஒன்றை ஒட்டியுள்ளார். அந்த நோட்டீசில், ‘நீதிமன்ற பணியாளர் வேலையைப் பெறுவதற்கு நேரடியாகவும், கட்சி பிரமுகர்கள் சிபாரிசுடனும் பலர் முயற்சி செய்கின்றனர். தன்னிடம் யாரும் பரிந்துரைக் கடிதம் கேட்டு வர வேண்டாம். நீதிபதிகளை உள்ளடக்கிய தேர்வுக் குழுவினரே பணியாளர்களை தேர்வு செய்கின்றனர்’ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், நகல் பிரிவு அலுவலர், சுகாதாரப் பணியாளர், துப்புரவுப் பணியாளர், தோட்டக்காரர், தண்ணீர் ஊற்றுபவர், காவலாளி போன்ற பணியிடங்கள் என மொத்தம், 3,557 பேரை தேர்வு செய்வதற்கு, கடந்த மாதம், எழுத்துத்தேர்வு நடந்தது. ஆயிரக்கணக்கானோர் இத்தேர்வை எழுதினர். இந்த வேலைகள் தொடர்பாக தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் பரிந்துரைக் கடிதம் பெற மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என தினமும் நூற்றுக்கணக்கானோர் அவரது வீட்டிலும் அலுவலகத்திலும் குவிகின்றனர்.
தற்போது அமைச்சர் ரகுபதி, தனது வீட்டுக்கு முன் வைத்துள்ள இந்த அறிவிப்பு நோட்டீஸைக் கண்டு திமுக தொண்டர்களும், அப்பகுதியினரும் மிரட்சி அடைந்துள்ளனர்.