கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆட்சியிலிருக்கும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், நாளையுடன் அங்கு தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது. இதனால், அரசியல் கட்சியினர் தீவிரமாக தங்கள் இறுதிக்கட்டத் தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக அக்கட்சியின் மூத்தத் தலைவர் சோனியா காந்தி, கர்நாடகா மாநிலம், ஹுப்ளியில் நேற்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.
அந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது; “வெறுப்பை பரப்பி அரசியல் செய்பவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்திய ஒற்றுமை பயணத்தால் காவிக்கட்சியான பாஜக கலக்கமடைந்துள்ளது. வெறுப்பை பரப்பவர்களால் கர்நாடகாவில் எந்த வளர்ச்சியையும் கொடுக்க முடியாது. வரும் தேர்தலில் பாஜக கர்நாடகாவில் தோல்வி அடைந்தால் மோடியின் ஆசி இந்த மாநிலத்திற்கு கிடைக்காது என அவர்கள் பகிரங்கமாக மக்களிடம் மிரட்டல்களை விடுத்துவருகிறார்கள். கர்நாடகா மக்கள் யாருடைய ஆசியையும் நம்பி இருப்பவர்கள் அல்ல. அவர்கள் தங்கள் சொந்த உழைப்பை நம்பி வாழ்ந்துவருபவர்கள் என்பதை பாஜகவுக்கு தெரிவிக்கிறேன்.
பாஜக அரசு செய்த ஊழல், முறைகேடு, சட்டவிரோதங்கள் குறித்து காங்கிரஸ் எழுப்பும் கேள்விகளுக்கு பாஜகவினர் பதில் கூறமாட்டார்கள். ஜனநாயக மதிப்பீடுகள் தங்களின் சட்டை பையில் இருப்பதாக பாஜகவினர் நினைக்கிறார்கள். கர்நாடகாவை ஊழலில் இருந்து விடுவித்து, நல்லாட்சி வழங்க காங்கிரஸ் கட்சியை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று பேசினார்.