உபி இடைத்தேர்தல் தோல்வி யோகி அரசு நடத்தும் ஆட்சியின் அழிவு என்று எடுத்துக்கொள்ள முடியாது என பா.ஜ.க. தேசியத்தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சமீபத்தில் நடந்துமுடிந்த இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வி அடைந்தது. குறிப்பாக தேர்தல் நடந்த கோரக்பூர் மற்றும் புல்பூர் ஆகிய தொகுதிகள் முறையே உ.பி. முதல்வர் யோகி மற்றும் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோருடையதாகும். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இந்தத் தோல்வி பா.ஜ.க.வுக்கு நெருக்கடியை அளித்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து பேசியுள்ள பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா, ‘கட்சி இந்த விவகாரத்தில் மிகத்தீவிரமாக கவனம் செலுத்தும். தோல்வி குறித்து ஆய்வுகளும் நடத்தப்படும். இந்தத் தோல்விக்கு பல காரணங்கள் உள்ளன. இரண்டு தொகுதிகளிலும் பதிவான வாக்குசதவீதம் என்பது மிகமிகக் குறைவு. சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ்வாதியும் அணியாக இணைந்து தேர்தலைச் சந்தித்திருக்கின்றன. அதுவொரு பிழைப்புவாதக் கூட்டணி. யோகி அரசு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 2019ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலில் உ.பி.யில் 50% வாக்குகள் பெறுவோம்’ என தெரிவித்துள்ளார்.