
மதிமுகவின் முதன்மை செயலாளரும் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ள துரை வைகோ திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, திருச்சி நாடாளுமன்ற தொகுதி என்பது தமிழகத்தில் உள்ள ஒரு தொகுதி தான். எனக்கு அரசியல் களம் புதிது அல்ல. மக்கள் எனக்கு நல்ல வரவேற்பை தந்து வருகிறார்கள். திருச்சி நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்த வழிவகை செய்ய வேண்டும்.
வருமானவரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்டவை பாஜகவின் கைப்பாவையாக செயல்படுகின்றன. பாஜகவிற்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு அவர்கள் சோதனை நடத்த செல்வதில்லை. பாஜகவை எதிர்ப்பவர்களிடம் தான் சோதனை செய்கிறார்கள். பா.ஜ.க கூட்டணியிலிருந்து அ.தி.மு.க வெளியேறி உள்ளது. அதன் காரணமாக கூட முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்து வரலாம்.
ம.தி.மு.க தொண்டர்கள் அனைவரும் திருச்சியில் போட்டியிட வேண்டும் என விரும்பியதால் நான் திருச்சியில் போட்டியிடுகிறேன். திருச்சிக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கே நான் கடமைப்பட்டுள்ளேன். திருச்சி தொகுதிக்கு என்னென்ன தேவையோ அதை அனைத்தையும் நிறைவேற்றி தருவேன்” என்றார்.